என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பீகார் தான்.
    • சென்னை திரும்பியதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பீகாருக்கு சென்றுள்ளார்.

    புத்தருக்கு ஞானம் கொடுத்த போதிமரம் பீகாரின் புத்த கயாவில் தான் இருந்தது.

    அதேபோல், சமூகநீதி ஞானம் வழங்கிய கர்ப்பூரி தாக்கூர், பிந்தேசுவரி பிரசாத் மண்டல், இராம் அவதேஷ் சிங், சரத்யாதவ், லாலு பிரசாத், நிதிஷ்குமார் உள்ளிட்டோரை வழங்கிய மண்ணும் பீகார் தான்.

    இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பீகார் தான்.

    அத்தகைய சிறப்புமிக்க பீகார் மண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்போம்.

    சென்னை திரும்பியதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம் என தெரிவித்துள்ளார். 

    • திரை உலகில் 50 ஆண்டுகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார்.
    • நடிகர் சங்கமோ, அதன் நிர்வாகிகளோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது.

    திருச்சி:

    தே.மு.தி.க. பொத்ச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்களின் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் 2-வது கட்டம் வருகிற 5-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இடம் மற்றும் தேதிகளை விரைவில் தலைமை அறிவிக்கும். இந்த ரத யாத்திரை மக்கள் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது.

    திருச்சிக்கு வெகு விரைவில் வர இருக்கிறோம். நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆரவாரத்துடன் சிறப்பான ஆதரவை அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை தே.மு.தி.க. வரவேற்கிறது.

    அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும்போது, நாட்டுக்கும் மக்களுக்கும் இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியும் என நம்புகிறோம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் வேறு. எங்களது பயணம் வேறு.

    நாங்கள் காலையில் பூத் நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கிறோம் மாலையில் ரத யாத்திரை நடத்துகிறோம். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும். கூட்டணி தொடர்பாகவும், யாருடன் கூட்டணி என்பதையும் வருகிற ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிப்போம்.

    இப்போது கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறோம். எம்.ஜி.ஆருக்கு பின்னர் மக்கள் தலைவராக திகழ்ந்தவர் விஜயகாந்த். ஆகவே அவரைப்பற்றி அரசியல் கட்சி தலைவர்களாக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் பேசாமல் இருக்க முடியாது. அது எங்களுக்கு சந்தோஷம்தான்.

    விஜய் கட்சி மாநாட்டில் ரேம்ப் வாக்கில் குதித்து ஏறும்போது பவுன்சர்கள் தொண்டர்களை தள்ளி விட்டது எல்லா கட்சியிலும் நடப்பது தான். திட்டமிட்டு யாரும் செய்வதில்லை. காவல்துறைக்கு அடையாளமாக திகழ்ந்தவர் விஜயகாந்த்.

    ஆனால் இன்றைக்கு தே.மு.தி.க. கொடி பிளக்ஸ் வைக்க அனுமதி மறுத்ததாக எங்கள் மாவட்ட செயலாளர் கூறினார். அனுமதி கொடுத்தால் எல்லாருக்கும் அனுமதி கொடுங்கள். இல்லை என்றால் யாருக்கும் அனுமதி கொடுக்காதீர்கள்.

    திரை உலகில் 50 ஆண்டுகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார். அவருக்கு முதல் ஆளாக நானும் தேமுதிகவும் வாழ்த்து தெரிவித்தோம். 50 ஆண்டுகள் கதாநாயகனாக நடிப்பது இந்தியாவில் எங்கும் நடக்கவில்லை. விஜயகாந்த் இருந்திருந்தால் அவருக்கு விழா எடுத்திருப்பார்.

    நடிகர் சங்கமோ, அதன் நிர்வாகிகளோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அது அவர்களின் விருப்பம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், மண்டல பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. செந்தில்குமார், மாவட்டச் செயலாளர்கள் டி.வி.கணேஷ், சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கலைப்புலி பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர். 

    • உங்களுடைய தோல்களையும் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
    • ஆரம்பத்திலே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கின்றது.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தோல் புற்று நோய் என்பது உண்மையான ஒன்று. இன்று எனது மூக்கில் இருந்த கேன்சரை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கி இருக்கிறார்கள். நான் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

    உங்களுடைய தோல்களையும் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்னுடைய விஷயத்தில், நோய் வருவதற்கு முன்பே காத்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்ததாக உள்ளது. நான் தொடர்ந்து சிகிச்சைகள் எடுத்து வருகின்றேன். ஆரம்பத்திலே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கின்றது.

    என்னுடைய மருத்துவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அகற்றி விட்டார்கள்.

    என்று கிளார்க் கூறியுள்ளார்.

    கிளார்க், 115 டெஸ்ட் போட்டியில் விளையாடி 8643 ரன்கள் அடித்திருக்கின்றார். இதில் 28 சதம் அடங்கும். இதேபோன்று 245 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7981 ரன்கள் அடித்துள்ளார்.

    2015-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்று ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். 2015 ஆஷஸ் தொடருக்கு பிறகு கிளார்க் ஓய்வெடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மு.க.ஸ்டாலின் உடன் எடுத்த புகைப்படத்தை ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    • எனது சகோதரர் மு.க.ஸ்டாலினை பீகாருக்கும், வாக்காளர் அதிகார யாத்திரைக்கும் வரவேற்கிறேன்.

    பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரயின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி SELIFE எடுத்துக்கொண்டார்.

    இந்த புகைப்படத்தை ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனது சகோதரர் மு.க.ஸ்டாலினை பீகாருக்கும், வாக்காளர் அதிகார யாத்திரைக்கும் வரவேற்கிறேன். உங்களுடைய வருகையும், சோரிக்கு எதிரான எங்கள் வாக்குச் சேகரிப்பு போராட்டத்திலும் பங்கேற்றது வலுப்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்காளர் பட்டியலில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமா, இல்லையா?
    • இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டுமா, இல்லையா?

    பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை சரியா, தவறா? என்பது குறித்து பொதுமக்களிடம் தேர்தல் ஆணையம் கருத்துக்களை கேட்டுள்ளது.

    வாக்காளர் பட்டியலில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமா, இல்லையா? இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டுமா, இல்லையா? வாக்காளர் பட்டியலில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களை கொண்டவர்களின் பெயர்கள் ஒரே இடத்தில் மட்டுமே இருக்க வேண்டுமா, இல்லையா? வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க வேண்டுமா, இல்லையா? இதில் பதில் ஆம் என்றால் வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் முயற்சியின் வெற்றிக்குப் பங்களிக்க முன்வாருங்கள் என்று தெரிவித்து உள்ளது.

    • ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருக்கிறார்.
    • மக்களவை தேர்தலில் 400 இடங்கள் என கனவு கண்டவர்களை 240-ல் அடக்கியது இந்தியா கூட்டணி.

    பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தமிழில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ராகுலின் கண்களில் ஒருபோதும் அச்சம் இருந்தது இல்லை.

    * இந்தியா கூட்டணிக்கான அடித்தளம் பாட்னாவில் தான் இடப்பட்டது.

    * பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் ஒருநாள் பறிப்பார்கள்.

    * தேர்தலுக்கு முன்னதாகவே பீகாரில் உங்களின் வெற்றி உறுதியாகி உள்ளதால் பேரணியை தடுக்க பார்க்கின்றனர்.

    * ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருக்கிறார்.

    * மக்கள் சக்தியே உயர்ந்தது என காட்டியிருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.

    * ராகுல், தேஜஸ்வியை வெல்ல முடியாததால் கொல்லைப்புறமாக நுழைய பார்க்கிறது பா.ஜ.க.

    * மக்களவை தேர்தலில் 400 இடங்கள் என கனவு கண்டவர்களை 240-ல் அடக்கியது இந்தியா கூட்டணி.

    * பீகாரில் பெறும் வெற்றி தான் இந்தியா கூட்டணி அடுத்தடுத்து பெறப்போகும் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.

    * மக்களின் வாக்குகளை பறிப்பவர்களை மக்கள் பறிப்பர் என்பதற்கு அடையாளம் தான் இங்கு கூடிய கூட்டம்.

    * மெஜாரிட்டி மெஜாரிட்டி என கூறிக் கொண்டிருந்தவர்களை மைனாரிட்டியாக மாற்றிக்காட்டியது இந்தியா கூட்டணி.

    * பீகார் சட்டசபையில் வெற்றி பெற்றதற்கான விழாவில் விரைவில் நான் பங்கேற்பேன்.

    * மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை பீகார் மக்கள் நிரூபிக்க வேண்டும்.

    * அரசியலுக்காக பேசுபவர் அல்ல ராகுல், உண்மையின் குரலாக இருப்பவர், அவர் கண்களில் உண்மையும் தைரியமும் உள்ளது.

    * பீகாரில் பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓய்வெடுக்கும் வசதி, நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வேனில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
    • விஜய்யின் சுற்றுப் பயண திட்டங்களை முக்கிய நிர்வாகிகள் தயார் செய்து வருகிறார்கள்.

    மதுரை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில் அடுத்த கட்டமாக தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தயாராகி வருகிறார். விஜய் பிரசாரம் செய்வதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வேன் பஞ்சாப் மாநிலத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஓய்வெடுக்கும் வசதி, நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வேனில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேனுக்குள் லிப்ட் வசதியும் உள்ளது.

    பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் பேசவும், பொது மக்களை சந்திக்கவும் இந்த லிப்ட் வழியாக வேனின் மேல் பகுதிக்கு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரசார வேன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) விஜய் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரசாரத்தை அவர் திருச்சியில் இருந்து தொடங்க உள்ளார். இதை உறுதிப்படுத்திய திருச்சி நிர்வாகிகள் பிரமாண்டமான ஏற்பாடுகளுக்கு தயாராகி வருகிறார்கள்.

    விஜய்யின் சுற்றுப் பயண திட்டங்களை முக்கிய நிர்வாகிகள் தயார் செய்து வருகிறார்கள். 234 தொகுதிகளையும் உள்ளடக்கி சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும்படி விஜய் கூறி இருக்கிறார். அதற்கு ஏற்ப பயண திட்டங்கள் தயாராகி வருகிறது.

    • காங்கிரசை ஆதரிக்கும் திரை பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுத்துள்ளார்கள்.
    • கூட்டணி தொடர்பாக சில சிறிய கட்சிகளுடன் விஜய் பேசி வருகிறார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க புது வியூகத்தை வகுத்து இருக்கிறார்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் விஜய் இந்த கூட்டணிகளில் இடம் பெற்றுள்ள சில கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.

    குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க அவர் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரசிலும் கோரிக்கை உள்ளது. அதற்காக சிலர் டெல்லியிலும் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் வாக்கு திருட்டை கண்டித்து ராகுல் காந்தி பிரசார பயணம் செய்து வருகிறார். 16 நாட்கள் நடைபெறும் இந்த பேரணியில் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை கலந்து கொள்ள காங்கிரஸ் அழைத்துள்ளது.

    காங்கிரசை ஆதரிக்கும் திரை பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுத்துள்ளார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காங்கிரசுடன் கைகோர்க்கும் முயற்சியில் விஜய் இறங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே கூட்டணி தொடர்பாக சில சிறிய கட்சிகளுடன் விஜய் பேசி வருகிறார். அந்த வகையில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் வலுவான கூட்டணியாக இருக்கும் என்று கருதுகிறார். இதற்காக ராகுலை சந்தித்து பேச விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கு ஒரு முன்னோட்டமாக ராகுலின் பீகார் பிரசார பேரணியில் கலந்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

    விஜய் பா.ஜ.க.வை எதிர்ப்பவர். ராகுலும் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரத்தை தான் மேற்கொண்டுள்ளார். எனவே அந்த பிரசார பேரணியில் பங்கேற்பது தமிழக வெற்றி கழகத்துக்கு பலன் அளிப்பதாகவே இருக்கும் என்று விஜய் நம்புகிறார். அது மட்டுமல்ல இந்த பேரணியில் பங்கேற்பதன் மூலம் ராகுலுடனான சந்திப்பு எளிதாகும். அதைத் தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சை தொடங்கவும் வாய்ப்பாக இருக்கும் என்று கருதுவதாக கூறப்படுகிறது.

    விஜய்யின் இந்த நகர்வு தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று கூறும் காங்கிரசார் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மாதிரி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மிகப்பெரிய மோசடியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் முயற்சியை ராகுல் மேற்கொண்டுள்ளார். நாட்டை காக்கும் இந்த போராட்டத்தை ஆதரிக்கும் அனைவரையும் காங்கிரஸ் வரவேற்கும்.

    இதை வைத்து கூட்டணி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.

    • 1 மாத காலமாக இந்தியாவே பீகாரை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது.
    • கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாறி விட்டது தேர்தல் ஆணையம்.

    பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தமிழில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * உங்களையெல்லாம் பார்ப்பதற்காக 2000 கி.மீ. கடந்து வந்திருக்கிறேன்.

    * பீகார் என்றாலே லாலு பிரசாத் யாதவ் தான் நினைவிற்கு வருவார். கலைஞரும் லாலு பிரசாத்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.

    * பா.ஜ.க.வின் அடக்குமுறையை தாண்டி அரசியல் செய்வதால் லாலு பிரசாத் உயர்ந்து நிற்கிறார்.

    * எத்தனையோ வழக்கு இருந்த போதிலும் தைரியமாக எதிர்கொண்டதால் உயர்ந்த அரசியல்வாதியாக இருக்கிறார் லாலு பிரசாத்.

    * லாலுவின் வழியில் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக உழைத்துக்கொண்டிருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.

    * 1 மாத காலமாக இந்தியாவே பீகாரை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது.

    * தேசத்திற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் போர்க்குரல் எழுப்பி உள்ளது பீகார் மாநிலம்.

    * ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவின் நட்பு அரசியல் நட்பு மட்டுமல்ல, 2 உடன்பிறப்புகளுக்கு இடையேயான நட்பு. இந்த நட்பு வெற்றியை பெற்று தரும்.

    * பீகாரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை பறிக்க நினைக்கின்றனர்.

    * மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கின்றனர் பா.ஜ.க.வினர்.

    * ஜே.பி.நாராயணன் செய்த பணியை தான் ராகுல் காந்தி செய்து வருகிறார்.

    * 65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை.

    * கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாறி விட்டது தேர்தல் ஆணையம்.

    * ராகுல் முன்னெடுத்துள்ள போராட்டத்தை வாழ்த்துவதற்காக பீகார் வந்துள்ளேன்.

    * ராகுல் காந்தி வாக்கு திருட்டு மோசடிகளை அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறார்.

    * சொந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குபவர்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயகாந்த் பற்றி பேசுவதனால் வாக்குகள் கிடைத்து விடுமா?
    • நான் முதல்வராக வந்தால் முதல் கையெழுத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்து வருபவர்களுக்கு அரசு வேலை என்பதுதான்.

    மதுரை:

    மதுரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சியில் வருகிற பிப்ரவரி 7-ந்தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஒரு கட்சியின் மாநாடு என்றால் எப்படி நடத்த வேண்டும்? என வருகிற பிப்ரவரி 7-ந்தேதி திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாட்டை பாருங்கள். அந்த மாநாட்டில் எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என பொறுத்திருந்து பாருங்கள்.

    ஒரு மாநாட்டு உரை என்பது எப்படி இருக்கும் என்பதை அப்போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் விஜய்யின் பேச்சை மூத்த தலைவர்கள் விமர்ச்சிக்கிறார்கள். அணில் ஏன் அங்கிள், அங்கிள் என கத்துகிறது. ஜங்கிள், ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் சி.எம். சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார்.

    த.வெ.க. மாநாட்டில் மரணம் என்பதை கட்சி மரணம் என்று பார்க்க முடியவில்லை. விஜய்யின் பவுன்சர்கள் அத்துமீறல் குறித்து ஓட்டு கேட்கும் போது நீங்கள் இவ்வாறு ஆக வர முடியாது அல்லவா? விஜய் மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை பார்க்காதீர்கள். நான் வைத்திருப்பது விதை நெல். பதர் கிடையாது.

    விஜயகாந்த் பற்றி பேசுவதனால் வாக்குகள் கிடைத்து விடுமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள். மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று. புயல், சுனாமியே வந்தாலும் எனது தம்பிகள், தங்கைகள், தாய்மார்கள் என்னுடன் நிற்பார்கள்.

    புதிய மசோதா அனைவருக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள். குஜராத் கலவரத்திற்கும், பா.ஜ.க. விற்கும் தொடர்பில்லை என்று கூறுகிறார். அதை நீங்கள் ஏற்கிறீர்களா? அமலாக்கத்துறை சோதனை செய்வது எந்த கட்சியில்? எலக்ட்ரோ பாண்டு அதிகம் பெற்றது எந்த கட்சி?

    பீகார் முதல்வர் சொல்வது குறித்து ஈரோட்டில் காசு கொடுக்கும்போது தடுக்காத தேர்தல் ஆணையம், கள்ள ஓட்டு போடும் போது தடுக்காத தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் எப்படி நேர்மையாக இருக்கும். மொத்தமாக தவறாக தான் இருக்கும். வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும். இந்த மெஷினை ஜப்பான் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. ஆனால் ஜப்பானில் எந்திர வாக்குப்பதிவா நடக்குது.

    பின்னர் எதற்கு 42 நாள் வாக்குப்பதிவு மெஷினை உள்ளே வைக்கிறீர்கள். போலீசே அதற்கு பாதுகாப்பு. உன்னிடம் சம்பளம் வாங்கக்கூடிய போலீஸ் தான் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். வாக்கு பெட்டியை மாற்றமாட்டார்களா?

    முதலீடு ஈர்க்க முதல்வர் வெளிநாடு செல்கிறார். முதலீடுகள் ஈர்க்க சென்றால் ஏற்கனவே ஈர்க்க சென்றது என்ன ஆனது எனக்கூறினாரா?. தேர்தலில் நான் தனியாகத்தான் நிற்பேன். கூட்டணி வைத்து ஏதாவது பிரச்சனையை இதுவரை சரி செய்து உள்ளார்களா? என்ன சாதித்துள்ளார்கள்.

    நான் முதல்வராக வந்தால் முதல் கையெழுத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்து வருபவர்களுக்கு அரசு வேலை என்பதுதான். இதுபோல 100 கையெழுத்து போட்டு நாட்டின் தலை எழுத்தை மாற்ற வேண்டும். கம்யூனிஸ்டு கட்சி ஆபீசை கல்யாண மண்டபமாக மாற்றி வருகிறார்கள். பா.ஜ.க. ஆபீசில் இஸ்லாமிய ஆணையும், இந்து பெண்ணையும் திருமணம் முடித்து வைப்பார்களா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உயர்ந்த வகுப்பினருக்கும், தாழ்ந்த வகுப்பினருக்கும் கல்யாணம் நடத்தி வைப்பார்களா?

    முதல்வர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது அவரவருடைய விருப்பம். சகிக்க முடியாத சொத்து வரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு பற்றி பேசுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மண்டாடி படம் வரும்போது நிறைய விஷயம் தெரிய வரும்.
    • அடுத்தடுத்து எல்லோரும் வர வேண்டும், அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடிகர் சூரி தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து செல்பி எடுத்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று எனக்கும், என் தம்பிக்கும் பிறந்தநாள். ராமன், லட்சுமணனாக நானும் என் தம்பியும் இரட்டை பிறவிகள். ராமன் என்ற பெயர் சூரியாக மாறியிருக்கிறது. எனது உணவகம் வளர்ச்சிக்கு சூரி என்று சொல்வார்கள். ஆனால் எனது தம்பிகள், அண்ணன்கள் தான் முழு காரணம், அதுவே எனக்கு பெருமை.

    மாமன் படப்பிடிப்புக்கு பிறகு அடுத்த படம் மண்டாடி படம் பிடிப்பு நடைபெற்று வருகிறது. வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு எப்படியோ அதேபோல் கடலில் போட் ரேசிங் கடலில் வீர விளையாட்டான மண்டாடி படம் வரும்போது நிறைய விஷயம் தெரிய வரும்.

    திரைப்படத்தில் காமெடி நடிகர்கள் குறைந்து வருகிறார்கள். திரையில் காமெடிகள் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து எல்லோரும் வர வேண்டும், அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கீங்க, நல்லா வந்திருக்கேன். அதே போல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள்.

    மதுரையில் நடந்த த.வெ.க. மாநாட்டில் அதன் தலைவர், தமிழக முதலமைச்சர் குறித்த விமர்சனங்களை தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் கூற விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லோரும் வேண்டும். நல்லவிதமாக அரசியலை தாண்டி எல்லாரும் எல்லாவற்றையும் மதிக்க வேண்டும்.

    இன்றைக்கு விஜய் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றிருக்கிறார். அடுத்து திரும்பி வரலாம். அனைவருக்கும் விஜய்யை பிடிக்கும், எனக்கும் அவரை பிடிக்கும். அவர் அரசியலுக்கு சென்றது அவரது விருப்பம் என்றார்.

    • கவுரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ.10,000 தான் ஊதியம் வழங்கப்பட்டது.
    • தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு, நிரந்தர உதவிப் பேராசிரியர்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஒரே மாதிரியான பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாடான வகையில் ஊதியம் வழங்கப்படுவது கண்ணியமற்ற செயல் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், இதற்கு காரணமான மாநில அரசுகள் தலைகுனிய வேண்டும்.

    கவுரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ.10,000 தான் ஊதியம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளைக் கடந்து இப்போதும் கூட ரூ.25,000 மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு இந்தியாவிலேயே மிகக் குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழகம் தான். இது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு. தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இயங்குவதற்கு காரணமே கவுரவ விரிவுரையாளர்கள் தான். மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் உள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை 8000க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து தான் தமிழக அரசு சமாளித்து வருகிறது. பல கல்லூரிகளில் பல துறைகளில் ஒரே ஒரு நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலையில், அத்துறைகளின் துறைத் தலைவர் பொறுப்புகளையும் கவுரவ விரிவுரையாளர்கள் தான் கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.25,000 மட்டுமே ஊதியம் தரப்படுகிறது.

    கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாட வேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு 28.01.2019-ந் தேதி ஆணையிட்டது. அதை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடியாது என்று தமிழக அரசு அறிவித்து விட்டது. கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு எவ்வளவு கண்ணியக்குறைவாகவும், அவமரியாதையாகவும் நடத்துகிறது என்பதற்கு இதுவே சாட்சி.

    குஜராத் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் வழக்கில் இப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகள் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த உச்சநீதி மன்றத்தின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பணி நிலைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×