என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் அணிதான் வெற்றி பெறும்- பிரேமலதா விஜயகாந்த்
    X

    சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் அணிதான் வெற்றி பெறும்- பிரேமலதா விஜயகாந்த்

    • திரை உலகில் 50 ஆண்டுகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார்.
    • நடிகர் சங்கமோ, அதன் நிர்வாகிகளோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது.

    திருச்சி:

    தே.மு.தி.க. பொத்ச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்களின் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் 2-வது கட்டம் வருகிற 5-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இடம் மற்றும் தேதிகளை விரைவில் தலைமை அறிவிக்கும். இந்த ரத யாத்திரை மக்கள் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது.

    திருச்சிக்கு வெகு விரைவில் வர இருக்கிறோம். நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆரவாரத்துடன் சிறப்பான ஆதரவை அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை தே.மு.தி.க. வரவேற்கிறது.

    அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும்போது, நாட்டுக்கும் மக்களுக்கும் இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியும் என நம்புகிறோம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் வேறு. எங்களது பயணம் வேறு.

    நாங்கள் காலையில் பூத் நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கிறோம் மாலையில் ரத யாத்திரை நடத்துகிறோம். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும். கூட்டணி தொடர்பாகவும், யாருடன் கூட்டணி என்பதையும் வருகிற ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிப்போம்.

    இப்போது கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறோம். எம்.ஜி.ஆருக்கு பின்னர் மக்கள் தலைவராக திகழ்ந்தவர் விஜயகாந்த். ஆகவே அவரைப்பற்றி அரசியல் கட்சி தலைவர்களாக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் பேசாமல் இருக்க முடியாது. அது எங்களுக்கு சந்தோஷம்தான்.

    விஜய் கட்சி மாநாட்டில் ரேம்ப் வாக்கில் குதித்து ஏறும்போது பவுன்சர்கள் தொண்டர்களை தள்ளி விட்டது எல்லா கட்சியிலும் நடப்பது தான். திட்டமிட்டு யாரும் செய்வதில்லை. காவல்துறைக்கு அடையாளமாக திகழ்ந்தவர் விஜயகாந்த்.

    ஆனால் இன்றைக்கு தே.மு.தி.க. கொடி பிளக்ஸ் வைக்க அனுமதி மறுத்ததாக எங்கள் மாவட்ட செயலாளர் கூறினார். அனுமதி கொடுத்தால் எல்லாருக்கும் அனுமதி கொடுங்கள். இல்லை என்றால் யாருக்கும் அனுமதி கொடுக்காதீர்கள்.

    திரை உலகில் 50 ஆண்டுகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார். அவருக்கு முதல் ஆளாக நானும் தேமுதிகவும் வாழ்த்து தெரிவித்தோம். 50 ஆண்டுகள் கதாநாயகனாக நடிப்பது இந்தியாவில் எங்கும் நடக்கவில்லை. விஜயகாந்த் இருந்திருந்தால் அவருக்கு விழா எடுத்திருப்பார்.

    நடிகர் சங்கமோ, அதன் நிர்வாகிகளோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அது அவர்களின் விருப்பம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், மண்டல பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. செந்தில்குமார், மாவட்டச் செயலாளர்கள் டி.வி.கணேஷ், சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கலைப்புலி பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×