search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பேட்டி அளித்த சசிகலா சிலர் எடுத்துள்ள தவறான முடிவுகளுக்கு இந்த தேர்தல் முடிவு பாடமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் ஏற்கனவே கொடி பிடித்துள்ள நிலையில் சசிகலா அவர்களோடு சேர்ந்து செயல்படுவாரா? இல்லை தனி அணியை உருவாக்குவாரா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா அதே வேகத்தில் முதலமைச்சர் நாற்காலியிலும் அமர நினைத்தார்.

    ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பால் அவர் சிறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.

    இதன் பின்னர் அ.தி. மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அவர் கட் சியை வழிநடத்தி வருகிறார்.

    பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் சசிகலா விடுதலையாகி வெளியே வந்தார். பெங்களூரில் இருந்து சென்னை வரை சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்ததும் அரசியல் களத்தில் அவர் புலிப் பாய்ச்சல் பாய்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்ற வகையிலேயே சசிகலாவின் பேச்சுக்களும் அமைந்திருந்தன.

    அ.தி.மு.க.வுக்கு நானே தலைமை தாங்குவேன். ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு செல்வேன் என்றெல்லாம் அவர் கூறியிருந்தார்.

    ஆனால் இவையெல்லாம் வெறும் பேச்சுக்களாகி போனது. சிறையில் இருந்து வெளியில் வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சசிகலா இன்னும் அதிரடி காட்டாமலேயே உள்ளார்.

    2021 சட்டமன்றத் தேர்தல், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தனது நிலைப்பாடு என்ன? என்பதைகூட வெளிப்படுத்தாமல் மவுனம் காத்துள்ள சசிகலா தற்போது புதிய வியூகத்துடன் களம் இறங்கி உள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 15 கேள்விகள் அடங்கிய படிவத்தை கடிதம் போல அனுப்பி உள்ள சசிகலா 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்.

    பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பேட்டி அளித்த சசிகலா சிலர் எடுத்துள்ள தவறான முடிவுகளுக்கு இந்த தேர்தல் முடிவு பாடமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டே சசிகலா இப்படி கூறியிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வினருக்கு சசிகலா படிவங்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் ஏற்கனவே கொடி பிடித்துள்ள நிலையில் சசிகலா அவர்களோடு சேர்ந்து செயல்படுவாரா? இல்லை தனி அணியை உருவாக்குவாரா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வை மீட்கவும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தவும் சசிகலா எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் அவருக்கு பலன் அளிக்கப்போவதில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. இருப்பினும் நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,680-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 54,040-க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,755-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • கோடை சீசனையொட்டி நாளை முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் குளுகுளு கோடை சீசன் நிலவும்.

    இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. அன்று தொடங்கி 22-ந் தேதி வரை 6 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

    அதேபோல் அடுத்த மாதம் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 3 நாட்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்கண்காட்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக 62 மலர் வகைகளில், 262 ரகங்களைக் கொண்ட 60 ஆயிரம் தொட்டிகளில் டேலியா, சால்வியா, கேண்டிடப்ட், ஜெனியா, பால்சம், அஜிரேட்டா உள்ளிட்ட ரகங்களில் மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

    தற்போது அந்த செடிகள் அனைத்தும் பூத்து குலுங்குகின்றன. இதையடுத்து, கண்ணாடி மாளிகை அருகே உள்ள புல்வெளி மைதானத்தில் உள்ள மலர் மாடங்களில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் 15 ஆயிரம் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. அதில் பூக்கள் பூத்து குலுங்குவது அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

    அதேபோல் பூங்காவில் புல்வெளி மைதானங்களை சீரமைக்கும் பணியிலும் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண மலர்களை கொண்டு பல்வேறு வகைகளில் அலங்காரங்களும் செய்யப்பட உள்ளது.

    கோடை சீசனையொட்டி நாளை முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக ஊட்டிக்கு செல்ல வேண்டும். ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக செல்ல வேண்டும்.

    பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் நாளை, நாளை மறுநாள் மற்றும் கோடை விழாவான 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊட்டி நகருக்குள் வர அனுமதி கிடையாது.

    • இன்ஸ்டாகிராமில் தோனி பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி ஒரு நபர் பதிவு செய்திருந்தார்.
    • வணக்கம் நான் எம்.எஸ்.தோனி நான் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட கணக்கில் இருந்து செய்தி அனுப்புகிறேன்.

    இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ்அப், பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் நூதன மோசடி அரங்கேற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கிரிக்கெட் வீரர் தோனி பெயரில் சமூகவலைத்தளம் மூலம் மோசடி செய்ய முயன்ற ஒருவரது பதிவு 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை ஈர்த்து வைரலாகி உள்ளது. இன்ஸ்டாகிராமில் தோனி பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி ஒரு நபர் பதிவு செய்திருந்தார். அதில், வணக்கம் நான் எம்.எஸ்.தோனி நான் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட கணக்கில் இருந்து செய்தி அனுப்புகிறேன். நான் ராஞ்சியில் புறநகரில் இருக்கிறேன். பணப்பையை மறந்து வைத்து விட்டேன். எனக்கு ரூ.600 அனுப்ப முடியுமா? நான் வீட்டிற்கு சென்றதும் திருப்பி அனுப்புகிறேன் என கூறப்பட்டிருந்தது.

    இந்த பதிவு சமூக ஊடகங்களில் சில மணி நேரங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் மோசடி நபரை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டனர்.

    • தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக இன்று 280 பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக இன்று (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம், நாளை (சனிக்கிழமை) மற்றும் 28-ந்தேதி (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 280 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 355 பஸ்களும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக இன்று 280 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 355 பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து 55 பஸ்களும் இந்த இடங்களில் இருந்தும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    கேரளா:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26 மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந் தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி கடந்த 19-ந்தேதி முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    2-ம் கட்டத் தேர்தலுக்கு கடந்த 4-ந்தேதி மனுத்தாக்கல் தொடங்கியது. 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் 2-ம் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    * கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    * பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி திருச்சூரில் வாக்களித்தார்.

    * காங்கிரஸ் வேட்பாளர் கே.சி.வேணுகோபால் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    * திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பத்தனம்திட்டா பாஜக வேட்பாளர் அனில் ஆண்டனி தனது வாக்கினை செலுத்தினார்.

    * கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார்.

    * பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார்.




    • மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
    • திருமண விழா முக்கியமானது தான் ஆனால் வாக்களிப்பதும் முக்கியம்.

    மகாராஷ்டிரா:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க திருமண கோலத்தில் மணமகன் ஆகாஷ், அமராவதியின் வதர்புரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது,

    திருமண விழா முக்கியமானது தான் ஆனால் வாக்களிப்பதும் முக்கியம். இன்று மதியம் 2 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது என்று கூறினார். 


    • கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • முதல்முறையாக வாக்களிப்பவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

    பெங்களூரு:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான விஷயம். நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகிறவர்தான் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள்.

    ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும் உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.

    முதல்முறையாக வாக்களிப்பவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இது ஒரு அற்புதமான அனுபவம். சந்தோஷம், எழுச்சியை கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
    • வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

    அந்தவகையில் கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய பிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    எனவே மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையிலேயே பிரசாரம் ஓய்ந்தது.

    இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

    2-ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15.88 கோடியாகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.


    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஆலயங்களில் சூரியப் பிரபையில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 13 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை காலை 7.26 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம்: அனுஷம் பின்னிரவு 3.01 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம்: சித்த, மரண யோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் மலைக்குப் புறப்பாடு. ஸ்ரீசென்னகேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஆலயங்களில் சூரியப் பிரபையில் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-கடமை

    சிம்மம்-கண்ணியம்

    கன்னி-கட்டுப்பாடு

    துலாம்- வரவு

    விருச்சிகம்-களிப்பு

    தனுசு- ஜெயம்

    மகரம்-பயணம்

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-பாசம்

    • சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
    • ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணி கோலி- பட்டிதாரின் அரை சதம் மற்றும் கேமரூன் க்ரீனின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த ஸ்கோரை ஐதராபாத் அணி எளிதாக எட்டிவிடும் என நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஆர்சிபி. ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம் 7, நிதிஷ் ரெட்டி 13, கிளாசன் 7, அபிஷேக் 31, சமத் 10 என விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதி கட்டத்தில் வந்த பேட் கம்மின்ஸ் 15 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்த வந்த புவனேஸ்வர் குமார் 3 பவுண்டரிகளை விளாசி 13 ரன்னில் வெளியேறினார். இறுதி வரை போராடிய ஷபாஸ் அகமது 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனால் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக விராட் கோலி அரை சதம் விளாசினார்.
    • அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 51, பட்டிதார் 50 ரன்கள் குவித்தனர்.

    அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இதுவரை நடைபெற்ற 17 ஐ.பி.எல் சீசன்களில் 10 சீசன்களில் 400-க்கும் அதிக ரன்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையைத் கோலி படைத்து உள்ளார்.

    அந்தவகையில், கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 அரைசதங்கள் உட்பட 557 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 634 ரன்களை குவித்திருக்கிறார். 2015-ம் ஆண்டு 505 ரன்களும், 2016 -ம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 சதங்கள் மற்றும் 7 சதங்கள் உட்பட 973 ரன்களை குவித்து அசத்தி இருக்கிறார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகள் விளையாடிய விராட் 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 530 ரன்கள் எடுத்துள்ளார்.

    2019-ம் ஆண்டில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 464 ரன்களும், 2020-ம் ஆண்டு 466 ரன்களையும் எடுத்திருக்கிறார் விராட் கோலி. அதேபோல், 2021-ம் ஆண்டில் 15 போட்டிகள் விளையாடிய அவர் 3 அரைசதங்கள் உட்பட மொத்தம் 405 ரன்களும், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 639 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் நடைபெற்று வரும் ஐ.பி.எல்லின் 17-வது சீசனில் 400 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். இவ்வாறாக இதுவரை நடைபெற்ற 17 சீசன்களில் சுமார் 10 சீசனில் 400-க்கும் அதிகமான ரன்கள எடுத்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.

    ×