என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது.
    • சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடந்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது.

    அந்த கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    டெல்லியில் நடந்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்டதாக தகவல் வெளியாக உள்ளது.

    மேலும், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி அறிவுறுத்தியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய செல்வப்பெருந்தகை," கூட்டணி குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை இடக்கூடாது. தலைமை எடுக்கும் முடிவுக்கு மாநில காங்கிரஸ் கட்டுப்பட வேண்டும்" என்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல் அறிவுறுத்தினார்.

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
    • 11 காளைகளை அடக்கி பாசிங்காபுரத்தைச் சேர்ந்த தர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

    உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இப்போட்டியை, இன்று காலை சுமார் 7:00 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

    சுமார் 1,100 காளைகளும், ஏறத்தாழ 600 மாடுபிடி வீரர்களும் இப்போட்டியில் களமிறங்கி உள்ளனர். போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகள் நடைபெற்றது.

    இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி சிறந்த வீரருக்கான ரூ.8 லட்சம் மதிப்பிலான காரை கருப்பாயூரணி கார்த்தி பரிசாக தட்டிச்சென்றுள்ளார்.

    இதேபோல், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் 2வது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து, 11 காளைகளை அடக்கி பாசிங்காபுரத்தைச் சேர்ந்த தர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் நின்று மிரட்டிய ஏவிஎம் பாலாவின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த காளைக்கான முதல் பரிசை வென்ற காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    சிறந்த காளைக்கான 2வது பரிசை வென்ற காளையின் உரிமையாளரான புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ்செல்வனுக்கு பைக் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    சிறந்த காளைக்கான 3வது பரிசை வென்ற காளையின் உரிமையாளரான மதுரையை சேர்ந்த கென்னடிக்கு இ-பைக் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

    • புதிதாக எதையும் வாக்குறுதியாகத் தர இயலாத பரிதாப நிலைக்கு போய்விட்டார் பழனிசாமி.
    • திமுக வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே "காப்பி பேஸ்ட்" வாக்குறுதியாக அறிவித்திருக்கிறார்.

    திமுக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முதன்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாகப் பாராட்டியிருக்கிறார். அதிமுக சார்பில் முதல்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்குக் கட்டணமில்லா பேருந்து திட்டம், அனைவருக்கும் வீடு என திமுக அரசின் திட்டங்களையே வழிமொழிந்திருக்கிறார்.

    பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம், நகரப் பேருந்துகளில் விலையில்லாமல் பயணம் செய்யும் மகளிர் விடியல் திட்டம், கலைஞர் கனவு இல்லம் ஆகியவற்றுக்கு அதிமுக நற்சான்றிதழ் கொடுத்திருக்கிறது.

    திராவிட மாடல் ஆட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை இந்தத் திட்டங்கள் ஏற்படுத்தியிருப்பதை, எதிர்க் கட்சித் தலைவர் உணர்ந்திருப்பதன் தாக்கம்தான் இப்போது அந்த திட்டங்களையே காப்பி அடித்துத் தேர்தல் வாக்குறுதியாகத் தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    புதிதாக எதையும் வாக்குறுதியாகத் தர இயலாத பரிதாப நிலைக்கு போய்விட்ட பழனிசாமி திமுக வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே "காப்பி பேஸ்ட்" வாக்குறுதியாக அறிவித்திருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களையே அதிமுக வாக்குறுதிகளாக அறிவித்திருப்பது மீண்டும் திமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தொடரும் என்பதைக் காட்டுகிறது.

    பழனிசாமி அளித்த இந்த வாக்குறுதிகளின் லட்சணம் எப்படி இருக்கும் தெரியுமா? கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 'வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்குச் சிறப்பு நிதி உதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்' என 2019 பிப்ரவரி 12-ம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தார் எடப்பாடி.

    2,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை, 2019, மார்ச் 4-ம் தேதி தலைமைச் செயலகத்தில் வெறும் 32 பேரின் குடும்பங்களுக்கு மட்டும் வழங்கி தொடங்கியும் வைத்தார். இதன்மூலம் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் பணம் வந்து சேரும் என மக்களை ஏமாற்றினார். ஆனால், யாருக்கும் பணம் கொடுக்கவில்லை.

    ''தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பணம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் 2,000 ரூபாய் வழங்கப்படும்'' எனத் தேர்தல் பிரசாரத்தில் சொன்னார் பழனிசாமி. பழனிசாமி ஆட்சியை விட்டு இறங்கும் வரையிலும் அந்த 2,000 ரூபாய் யாருக்கும் போய்ச் சேரவில்லை. இதில் கொடுமை என்ன தெரியுமா? 2,000 ரூபாய் திட்டத்துக்கு விழாவெல்லாம் நடத்தி விளம்பரமெல்லாம் செய்தார்கள். அந்த விழாவுக்குத் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டதற்குக் கட்டணமாக 1 கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 390 ரூபாய் செலவிட்டு மக்களை ஏமாற்றினார்கள்.

    2019-ல் ஒரே ஒரு தவணையாக 2 ஆயிரம் ரூபாயை ஆட்சியில் இருந்த போது தராத பழனிசாமியா, அடுத்து ஆட்சிக்கு வந்து ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாயை வழங்குவார்?

    "நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்" என்று இரண்டாவது வாக்குறுதி கொடுத்திருக்கிறார் பழனிசாமி. மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்தை திமுக ஆட்சி செயல்படுத்திய போது, அதற்கான பேருந்துகளைப் பாமரர்களும் எளிதாக அறியும் வகையில் பிங்க் வண்ணத்தைப் பூசியது போக்குவரத்துக் கழகம். அப்போது விடியல் பயணத்திட்டப் பேருந்துகளை "லிப்ஸ்டிக் பஸ்கள்" என கிண்டலடித்து, பெண்களைக் கொச்சைப்படுத்திய பழனிசாமியின் உதடுகள்தான், இப்போது பொய் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டிருக்கின்றன.

    மகளிருக்கு 2 ஆயிரம், ஆண்களுக்கு விலையில்லா பேருந்துப் பயணம் வரிசையில்தான் வீடில்லாத ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகளைக் கட்டி வழங்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தையும் அம்மா இல்லத் திட்டம் என நகலெடுத்திருக்கிறார் பழனிசாமி.

    பழனிசாமி அறிவித்திருப்பதிலேயே மிகப்பெரிய நகைச்சுவை நூறு நாள் வேலைத்திட்டத்தை நூற்றைம்பது நாளாக உயர்த்துவாராம், நூறு நாள் வேலைத்திட்டத்திற்கே குழி பறிக்கும் பாஜக-வின் புதிய சட்டத்தை ஆதரித்த துரோகி பழனிசாமி தன்னை ஏமாற்றிக் கொள்ளலாமே தவிரத் தமிழ்நாட்டு மக்களை ஒருநாளும் ஏமாற்ற முடியாது.

    எம்.ஜி.ஆர் மாளிகை பரணில் இருக்கும் அதிமுகவின் 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கைகளில் கொடுத்த வாக்குறுதிகளைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள் பழனிசாமி. அதில் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சு? என மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள்.

    தென் தமிழகத்தில் ஏரோ பார்க், 10 ஆடை அலங்காரப் பூங்காக்கள், மின்னணு ஆளுமையின் கீழ் போலீஸ் ஸ்டேஷன்கள், ஆடை அலங்காரச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு செல்போன், கேபிள் டி.விக்கு இலவச செட்-டாப் பாக்ஸ், பொது இடங்களில், இலவச'வை-பை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்று 20 லிட்டர் மினரல் வாட்டர், லேப்டாபுடன் இலவச இண்டர்நெட், ஐந்து கோடி ரூபாயில் அம்பேத்கர் அறக்கட்டளை, ரூ.100 கோடியில் அம்மா ஈடு உத்தரவாத நிதியம், கோ-ஆப்டெக்ஸில் துணி வாங்க ரூ 500 வெகுமதி கூப்பன் என்றெல்லாம் வாரி வழங்கிய வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தனது தோல்வியை உணர்ந்து கொண்ட வெளிப்பாடுதான் பழனிசாமி வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகள். பொதுவாகத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் அறிக்கையில்தான் வாக்குறுதிகளைக் கட்சிகள் தரும். தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், முந்திக் கொண்டு வந்து ஏன் பழனிசாமி வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார்? திராவிட மாடல் அரசு, மக்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் அடிமட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ''எங்குப் பார்த்தாலும் மக்களிடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு பற்றித்தான் பேசிக்கிறாங்க'' என நிர்வாகிகள் எல்லாம் பழனிசாமியிடம் புலம்பிய பிறகுதானே திடீரென இந்த வாக்குறுதிகளை வெளியிடும் யோசனைக்கு பழனிசாமி வந்திருக்கிறார்.

    அதிமுகவிடம் எந்தப் புதிய யோசனைகளும் இல்லை என்பதையே பழனிசாமியின் வாக்குறுதிகள் காட்டுகின்றன. மக்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லாமல் திமுகவின் திட்டங்களையே காப்பியடிக்கும் கையறு நிலைக்குச் சென்றுவிட்ட பழனிசாமியின் இந்தப் பம்மாத்து நாடகத்தை மக்கள் யாரும் நம்பப் போவதில்லை.

    இவ்வாறு அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.

    • ஜல்லிக்கட்டு போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகளாக நடைபெறுகிறது.
    • படுகாயம் அடைந்த 19 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பு.

    உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியை, இன்று காலை சுமார் 7:00 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

    சுமார் 1,100 காளைகளும், ஏறத்தாழ 600 மாடுபிடி வீரர்களும் இப்போட்டியில் களமிறங்கி உள்ளனர். போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகளாக நடைபெறுகிறது.

    இந்நிலையில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காவலர்கள், வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 48 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இதில், வீரர்கள் 17 பேர், காளை உரிமையாளர்கள் 12 பேர், பார்வையாளர்கள் 15 பேர், காவலர்கள், தீயணைப்பு வீரர் என 4 பேர் காயமடைந்துள்ளனர்.

    காளை முட்டியதில் படுகாயம் அடைந்த 19 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது.
    • நம் திராவிட நாயகன் முதலமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார்.

    திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்பை அதிமுக வெளியிடுகிறது என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

    ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக திகழும் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிவாலயம் வாசலில் குத்த வைத்து காத்திருக்கும் அதிமுகவினர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானதும் முதல் காப்பியை வாங்கிக்கொண்டு, அதை அப்படியே காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது தான் வழக்கமான நடைமுறை. இந்த முறை, அதில் விசித்திர மாற்றத்தை செய்து தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக மாண்புமிகு திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு "டூப்" போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது !

    2021ல் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான போது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை எனவே இதையெல்லாம் நிறைவேற்றவே முடியாது என்றார் பழனிசாமி. ஆனால், தமிழ்நாட்டை அனைத்து தளங்களிலும் முன்னேற்றியதுடன், எதையெல்லாம் திமுகவால் செய்ய முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சொன்னாரோ, அதை எல்லாம் நம் திராவிட நாயகன் முதலமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார்.

    இப்போது புதிதாக எதுவும் சிந்திக்க திராணி இல்லாமல் திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக.

    அவர்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளவர்களின் திறமை மீது நம்பிக்கை இல்லாமல், திமுக அரசின் சாதனை திட்டங்களை ரோல் மாடலாகக் கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    இது உங்களுக்கு செட் ஆகல சார். வெயிட் பண்ணுங்க. உங்க மூளையை இப்ப கசக்க வேண்டாம். எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை.
    • தெலுங்குப் பழமொழி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும்.

    மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏமாற்று அறிவிப்பை கொடுத்துள்ளார என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக, மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    ஆகா, தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கப் போகிறார் என்று அனைவரும் நினைத்தோம். ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று, மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என்று மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    ஏற்கனவே, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த ஐந்து ஆண்டுகளில், கொடுக்கப்பட வேண்டிய சுமார் ₹60,000 ஊக்கத்தொகை எப்போது வருமென்று தெரியவில்லை. இப்படி தொடர்ந்து வெற்று வாக்குறுதிகள் கொடுத்து யாரை ஏமாற்றலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்பது தெரியவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிடித்த "பேரு பெத்த பேரு, தாக நீலு லேது" என்ற தெலுங்குப் பழமொழி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கேரளா-தமிழக எல்லைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இதுவரை இல்லை.

    கோவை:

    கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான வாத்து, கோழிகள் சில வாரங்களுக்கு முன்பு திடீரென இறந்தது. அதனை தொடர்ந்து நடத்திய சோதனையில் பறவை காய்ச்சல் தாக்கி கோழிகள், வாத்துகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அந்த பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் கோழி, வாத்து, காடை உள்ளிட்ட 13 ஆயிரம் பறவைகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கேரளா-தமிழக எல்லைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் உள்ள 1200 கோழிப்பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் பறவை காய்ச்சல் குறித்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி பண்ணைகளில் அசாதாரண கோழி இறப்பு உள்ளதா? பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் தென்படுகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இதுவரை இல்லை. இங்கிருந்து தான் கோழிகள் சப்ளை செய்யப்படுகிறது. அங்கிருந்து வரத்து இல்லை. இருப்பினும், 1200 பண்ணைகளிலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உரிமையாளர்கள் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகள், கறிக்கடைகள், நீர்நிலைகள் போன்ற இடங்களில் மாதந்தோறும் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதில் தற்போது வரை நடத்தப்பட்ட ஆய்வில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும் பண்ணைகளில் திடீரென கோழிகள் இறப்பு அதிகமாக இருந்தால் அல்லது பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை டாக்டரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.
    • வடிகால் கால்வாய் தூர்வாரப்படாததாலும் ஆகாய தாமரைகள் அகற்றப்படாததாலும் பயிர்களை சூழ்ந்த தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை முடிவடையும் நிலையில் உள்ளது. இருந்தாலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் கரையை கடந்தது.

    இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாகை, திருவாரூர் உள்ளிடட டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

    இந்த சூழ்நிலையில் நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் திருப்பூண்டி, கீழப்பிடாகை, காரப்பிடாகை, மகிழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டு நடவு செய்து ஒரு வாரமே ஆன 2000 ஏக்கர் இளம் சம்பா, தாளடி நெற்பயிர்களை மழைநீர் மூழ்கடித்தது. மேலும் வடிகால் கால்வாய் தூர்வாரப்படாததாலும் ஆகாய தாமரைகள் அகற்றப்படாததாலும் பயிர்களை சூழ்ந்த தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தொடர்ந்து சில நாட்களாக பயிர்கள் மூழ்கிய நிலையில் உள்ளதால் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக வடிகால் வாய்க்காலை தூர்வாரி தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களை காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • அமெரிக்க வரி விதிப்பு தொடர்பான சவால்கள் காரணமாக ஏற்றுமதி சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
    • ஜப்பான் நாட்டுடன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

    திருப்பூர்:

    இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், உலகளாவிய வர்த்தக பிரச்சனைகளுக்கு இடையிலும் கடந்த டிசம்பர் மாதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. அதன்படி இந்திய ரூபாய் மதிப்பில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.13 ஆயிரத்து 550 கோடியே 64 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.12 ஆயிரத்து 424 கோடியே 17 லட்சத்து நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 சதவீதம் வளர்ச்சியாகும்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.1 லட்சத்து ஆயிரத்து 87 கோடியே 19 லட்சத்துக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.94 ஆயிரத்து 940 கோடியே 59 லட்சத்துக்கு நடந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) தெரிவித்துள்ளது.

    அமெரிக்க வரி விதிப்பு தொடர்பான சவால்கள் காரணமாக ஏற்றுமதி சற்று பாதிக்கப்பட்டுள்ளது. அந்த இழப்பை ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட நாடுகளுடன் ஈடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஜப்பான் நாட்டுடன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அமெரிக்காவுக்கான ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.6 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது என்று ஏ.இ.பி.சி. தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் வரி பிரச்சனை இருந்தபோதிலும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி சாதகமாக காணப்படுகிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியாவில் திருப்பூர் மாநகரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதனால் திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் முந்தைய ஆண்டைவிட அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.

    • மெரினா கடற்கரைக்கு பெற்றோருடன் வந்த குழந்தைகளுக்கு இந்த அடையாள பேண்ட் கட்டி விடப்பட்டது.
    • மெரினா கடற்கரை அழகுபடுத்தப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்களும் அதிக அளவில் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டது.

    இன்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரையில் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குடும்பத்தோடு திரண்டனர்.

    இதேபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். இதன் காரணமாக மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பகுதிகளுமே களைகட்டி காணப்பட்டது.

    இப்படி பொழுதுபோக்கு மையங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் அறிவுரையின் பேரில் 16 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு அளிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக போலீஸ் கட்டுப்பாடு அறைகள் அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும். அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    மீட்புப்பணிக்காக மோட்டார் படகுகளில் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

    உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக போலீஸ் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 போலீசார் கண்காணித்தனர்.

    மெரினா கடற்கரையில் 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். குதிரைப்படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய ரோந்து வாகனம் மூலம் போலீசாரால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டது.

    பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒரு தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டறை, 3 தற்காலிக போலீஸ் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

    கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்டநெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர போலீஸ் மூலம் தயாரிக்கப்பட்ட, கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள், போலீஸ் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் வைக்கப்பட்டிருந்தது.

     

     

    மெரினா கடற்கரைக்கு பெற்றோருடன் வந்த குழந்தைகளுக்கு இந்த அடையாள பேண்ட் கட்டி விடப்பட்டது.

    மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.

    மதுபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. ரோடு மற்றும் இதர சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது பைக் ரேசை தடுப்பதற்கும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் காலையிலேயே தங்களது குடும்பத்தோடு திரண்டு இருந்தனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சபாரியை காண்பதற்காக நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் டிக்கெட் எடுத்தனர். இதற்காக அவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க நேர்ந்தது.

    பூங்காவை சுற்றி பார்ப்பதற்கான வாகனத்தை பதிவு செய்வதற்கும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    கிண்டி சிறுவர் பூங்காவிலும் வரிசையில் நின்று பொதுமக்கள் டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு பூங்காவுக்குள் நுழைந்தனர்.

     

    கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் சிறுவர், சிறுமிகள் தங்களது பெற்றோர்களோடு இணைந்து காணும் பொங்கலை குதூகலத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.

    மெரினா கடற்கரை இப்போது அழகுபடுத்தப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்களும் அதிக அளவில் அமைக்கப்பட்டு உள்ளன.

    அனைவரையும் கவரும் வகையில் இதய வடவிலான இருக்கைகள், பளிங்கு போன்று வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இருக்கைகள் ஆகியவைகளும் கடற்கரை மணல் பரப்பில் புதிதாக இடம்பெற்றுள்ளன.

    இந்த இருக்கைகளில் அமர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டி போட்டு கொண்டு புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

    இதேபோன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, திருச்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அலைமோதினார்கள். இதைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்கி உயிரிழந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இப்படி இன்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
    • மக்கள் விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ரூ.454 கோடிக்கு மது விற்பனையாகி இருந்த நிலையில், நடப்பாண்டில் அதை விட 14.10 சதவீதம் அதிகம் ஆகும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் 11.19 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், அதை விட அதிகமாக மது வணிகம் வளர்ச்சியடைந்திருக்கிறது. மக்களுக்கு மதுவைப் புகட்டுவதில் மட்டும் தான் தி.மு.க. அரசு சாதனை படைக்கிறது.

    கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின்போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில், நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

    பொங்கல் திருநாள் மது வணிகத்தில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், மனமகிழ் மன்றங்களின் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது என்பது தான். இது மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூ.435.41 கோடி மதுவுடன் ஒப்பிடும்போது 19 சதவீதம் ஆகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் 500 மதுக்கடைகளை, அதாவது 9 சதவீதம் மதுக்கடைகளை மூடிய தி.மு.க. அரசு, 19 சதவீதம் கூடுதலாக மது வணிகம் செய்யும் அளவுக்கு மனமகிழ் மன்றங்களைத் திறந்து மதுவை விற்பனை செய்திருப்பது உறுதியாகி யிருக்கிறது.

    மக்கள் விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனிடையே இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    22-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    23-ந்தேதி கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதற்கிடையே, இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

    உறைபனி எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    ×