என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • முதலில் அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா?
    • ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

    அதில், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உதவித்தொகை ரூ.2000 என்ற அ.தி.மு.க.வின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * இலவச பேருந்து வேண்டும் என உங்களிடம் யார் கேட்டது?

    * முதலில் அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா?

    * தற்போதைய அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா?

    * ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்.

    * எங்கள் தாய்மார்களுக்கு தேவையாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள் என்று அவர் கூறினார்.

    • தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர்.
    • சாலையோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.

    இதனிடையே தமிழக-கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது.

    இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 700 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1000 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் எண்ணைய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து மீன் குழம்புடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். சாலையோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு.
    • பொங்கலுக்குக் கொடுத்த ரூபாய் நோட்டில் உள்ள எண்ணும், டாஸ்மாக்கில் வசூலாகியுள்ள நோட்டில் உள்ள எண்ணும் ஒத்துப்போகிறது என்று செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,

    உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது தி.மு.க. அரசு!

    "போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என உருகி உருகி காணொளி வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் ரூ.518 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை களைகட்டியிருப்பது சுவாரஸ்யமான நகை முரண். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சாராய வாடை இல்லாத கொண்டாட்டங்களே இல்லை என்று கூறுமளவிற்குப் பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு.

    அதிலும், குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு ரூ.3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ள திமுக அரசின் அறிவாற்றலைப் பார்க்கையில், இதற்குப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற நகைச்சுவை வசனம் தான் நினைவிற்கு வருகிறது. பொங்கலுக்குக் கொடுத்த ரூபாய் நோட்டில் உள்ள எண்ணும், டாஸ்மாக்கில் வசூலாகியுள்ள நோட்டில் உள்ள எண்ணும் ஒத்துப்போகிறது என்று செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்களின் மகிழ்ச்சியை விட, மக்களின் மன நிம்மதியை விட, போதையால் சமூகத்தில் நிகழும் அசம்பாவிதங்களைத் தடுப்பதை விட டாஸ்மாக் வருமானத்தைப் பெரிதாகப் பார்க்கும் ஒரு அரசு, இனியொரு முறை தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக் கூடாது! என்று கூறியுள்ளார். 



    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
    • எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி 109 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. நிறுவன தலைவரான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமைக் கழகத்திற்கு வருகை தந்தார். அவரை அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர்.

    அப்போது வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தலைமைக் கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

    பின்னர் கட்சி அலுவலகத்தில் திரண்டு இருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி 109 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. இந்த கேக்கையும் எடப்பாடி பழனிசாமி வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

    பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கட்சி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டன. இவற்றையும் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, ஜெயக்குமார் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் சென்னை மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், பாலகங்கா, ஆதிராஜாராம், புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், இலக்கிய அணி மாநில இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலாளர்கள் கே.எஸ்.மலர் மன்னன், எம்.ஜி.சக்திவேல்,

    அம்மா பேரவை மாநில துணை செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் டி.சி. கோவிந்தசாமி, மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் காரப்பாக்கம் லியோ சுந்தரம், தேனாம்பேட்டை முன்னாள் கவுன்சிலர் சின்னையன், கழக மாணவர் அணி துணை செயலாளர் வக்கீல் பழனி, வடபழனி மின்சார சத்திய நாராயண மூர்த்தி, ஆயிரம்விளக்கு மேற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம், வி.எஸ்.வேல்ஆதித்தன், மாவட்ட துணை செயலாளர் சைதை சொ.கடும்பாடி, சைதை சி.எம்.சாமி, எம்.என்.இளங்கோ, ஆயிரம் விளக்கு டி.ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடற்கரையில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகளாக காட்சியளிக்கின்றனர்.
    • கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் ஒட்டகத்தில் சவாரி செய்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக வேளாங்கண்ணி அமைந்துள்ளது. இங்கு கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்ககூடிய புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. கடற்கரை நகரமாக விளங்ககூடிய வேளாங்கண்ணி ஆன்மீகம் நகரம் மட்டும் இல்லாமல் பொழுது போக்கும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

    எப்போதுதே வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந்தேதியில் இருந்து தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டுகடங்காத அளவில் உள்ளனர்.

    இன்று காணும் பொங்கலை முன்னிட்டு வேளாங்கண்ணிக்கு அதிகாலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள், மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேரம் செல்ல செல்ல கட்டுகடங்காக கூட்டம் காணப்பட்டது. இதனால் கடற்கரையில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகளாக காட்சியளிக்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். காணும் பொங்கலை முன்னிட்டு பலர் தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்து கடற்கரையை சுற்றி பார்த்து குளித்து மகிழ்ந்தனர்.

    வேளாங்கண்ணி பேராலயம், கடற்கரை சாலை, நடுத்திட்டு, தியான கூட்டம், முடி காணிக்கை செலுத்தும் இடம், பழைய மாதா கோவில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் ஒட்டகத்தில் சவாரி செய்கின்றனர்.

    சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ளதால் கடலில் குளிக்கும்போது அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக ஏராளமான கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    • தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி முதல் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
    • கடன் சுமையை கையாள தி.மு.க. அரசுக்கு திறமை இல்லை.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி முதல் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து அவர் கூறுகையில், நிர்வாக திறமை இருந்தால் அனைத்தையும் சமாளிக்க முடியும். கடன் சுமையை கையாள தி.மு.க. அரசுக்கு திறமை இல்லை என்றார். 

    • அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆர். கனவு நிறைவேறும்.
    • பிரதமரின் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட உள்ளனர்.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

    எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளான இன்று அவரது திருவுருவ சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆர். கனவு நிறைவேறும்.

    * பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு எனக்கு அழைப்பில்லை.

    * பிரதமரின் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட உள்ளனர்.

    * யாருடன் கூட்டணி என்பது பற்றி ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்.

    * அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு குறித்து வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.

    * எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150நாட்களாக உயர்த்தப்படும்.
    • 5 லட்சம் மகளிருக்கு ரூ.25,000 மானியத்தில் அம்மா இரு சக்கர வாகன திட்டம்.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெறுவது வழக்கம்.

    அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன் கூட்டியே முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அதிரடியாக வெளியிட்டார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி திடீரென நிருபர்களை அழைத்து சட்டசபை தேர்தல் தொடர்பான வாக்குறுதி பற்றி பேட்டியளித்தார்.

    எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சமாக ஒவ்வொரு மாதமும் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இந்த தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகள் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் 17-வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வின் சார்பில் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்படுகிறது.

    1. மகளிர் நலன் : (குல விளக்குத் திட்டம்)-சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்: நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    3. அனைவருக்கும் வீடு 'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப்பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.

    அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

    4. 100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.

    5. அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம்: மகளிருக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் வழியில் தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசு பணி வழங்கப்படும்.

    அலங்காநல்லூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், களத்தில் நின்று நீண்ட நேரம் விளையாடிய காளையின் உரிமையாளர்களுக்கும் கார், டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளைடக்கி பரிசு பெறும் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று அலங்காநல்லூரில் உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை கண்டு களிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். அவரை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வத்துடன் போட்டியை கண்டுகளித்தார். அப்போது வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் தங்க மோதிரம் பரிசாக வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். அதே நேரத்தில் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த மதுரை மண் என்பது வீரம் விளைந்த மண்ணாகவும், அப்படிப்பட்ட வீரம் விளைந்த இந்த மண்ணில் வீர விளையாட்டான உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்கின்றபோது நமக்கு எல்லாம் வீரமே வருகிறது. அதனை அடக்குகிற காளையர்களை பார்க்கும்போது நம்முடைய தமிழ் மண்ணுக்கு பெருமையாக இருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இந்த வீரம் விளைந்த மண்ணில் அறிவு வளர்ச்சிக்காக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது உங்களுக்கு எல்லாம் தெரியும்.

    அதேபோல தமிழர்களின் அடையாளமாக இந்த வீர விளையாட்டுக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கமும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது அரசின் மிகப்பெரிய சாதனை.

    ஆகவே இதை சொல்லுகின்ற நேரத்தில் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஜல்லிக்கட்டை பார்க்க முதலமைச்சராக வந்திருக்கக்கூடிய நான் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டு போனால்தான் உங்களுக்கும் திருப்தி. எனக்கும் திருப்தி. அதனால் 2 அறிவிப்புகளை நான் மகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.

    முதல் அறிவிப்பு பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டியில் பங்பெற்று அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசு பணியிடங்களுக்கு பணி அமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    2-வது அறிவிப்பு உலக புகழ்பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரண்டு அறிவிப்பும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். அந்த மகிழ்ச்சியோடு "தமிழர்கள் எல்லோரும் வெல்வோம் ஒன்றாக" என்று கூறி விடைபெறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் வழியில் தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளையும், காளையர்களின் வீரத்தையும் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசல் வழியாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் வழியில் தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார். வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளையும், காளையர்களின் வீரத்தையும் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் மிரட்டிய காளையின் உரிமையாளருக்கு தங்க மோதிரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிவித்தார்.

    அவருடன் போட்டியை அமைச்சர்கள் மூர்த்தி, கே.என். நேரு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன் கண்டு ரசித்தனர்.

    • ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக...
    • பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில்...

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக மக்களின் நெஞ்சங்களில்

    பொன்மனச் செம்மலாக,

    ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக,

    பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என கூறியுள்ளார். 



    • சாலைகளே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியதால், சாலைகளில் வந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
    • ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் இந்த பனி மூடிய இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகள், தலைக்குந்தா மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு மற்றும் உறைபனி காணப்பட்டது.

    அதிகாலை முதலே அடர்த்தியான பனி மூட்டம் சூழ்ந்ததால், வீடுகள், தோட்டங்கள், புல்வெளிகள் அனைத்தும் வெள்ளைத் திரை போர்த்தியது போல் காட்சியளித்தன.

    தலைக்குந்தா, எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான பகுதிகளில் உறை பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் புல்வெளிகள், தேயிலை தோட்டங்கள், வாகனங்கள் மற்றும் கூரைகளின் மேல் உறைபனி படர்ந்து அந்த பகுதியே வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.

    கடும் பனிப்பொழிவால் காலை நேரத்தில் கடும் குளிரும் காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    சாலைகளே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியதால், சாலைகளில் வந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

    பொங்கல் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் இந்த பனி மூடிய இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.

    ×