என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இல்லாதவர்களுக்கு வீடு, மகளிருக்கு மாதம் ரூ.2000- தேர்தல் வாக்குறுதி அளித்த இபிஎஸ்
    X

    இல்லாதவர்களுக்கு வீடு, மகளிருக்கு மாதம் ரூ.2000- தேர்தல் வாக்குறுதி அளித்த இபிஎஸ்

    • 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150நாட்களாக உயர்த்தப்படும்.
    • 5 லட்சம் மகளிருக்கு ரூ.25,000 மானியத்தில் அம்மா இரு சக்கர வாகன திட்டம்.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெறுவது வழக்கம்.

    அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன் கூட்டியே முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அதிரடியாக வெளியிட்டார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி திடீரென நிருபர்களை அழைத்து சட்டசபை தேர்தல் தொடர்பான வாக்குறுதி பற்றி பேட்டியளித்தார்.

    எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சமாக ஒவ்வொரு மாதமும் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இந்த தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகள் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் 17-வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வின் சார்பில் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்படுகிறது.

    1. மகளிர் நலன் : (குல விளக்குத் திட்டம்)-சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்: நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    3. அனைவருக்கும் வீடு 'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப்பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.

    அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

    4. 100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.

    5. அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம்: மகளிருக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×