search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு: எத்தனை மாணவர்களுக்கு சீருடைகள், பாட புத்தகங்கள் தேவை என்று கணக்கெடுப்பு
    X

    4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு: எத்தனை மாணவர்களுக்கு சீருடைகள், பாட புத்தகங்கள் தேவை என்று கணக்கெடுப்பு

    • பள்ளிகள், கல்லூரிகளில் மழை மற்றும் வெள்ளநீர் சூழ்ந்து இருந்தால், அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
    • மழை வெள்ளத்தால் மாணவ-மாணவிகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை ஓய்ந்த நிலையிலும், வெள்ள நீரால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மழை, வெள்ள நீரை கருத்தில் கொண்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல் 2 நாட்களுக்கு பொது விடுமுறை விடப்பட்ட நிலையில், அதன் பிறகு வெள்ள நீர் அதிகம் சூழ்ந்திருந்த பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் தொடர் விடுமுறைக்கு பிறகு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயங்கத் தொடங்கின.


    பள்ளிகளை பொறுத்தவரையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 14 பள்ளிகளில் வெள்ள நீர் வடியாத நிலை இருப்பதாகவும், அதிலும் சென்னையில் மட்டும் 6 பள்ளிகள் உள்ளதாகவும் சொல்லப்பட்டது. அந்த பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடந்தன.

    அதேபோல், இந்த 4 மாவட்டங்களில் இருக்கும் 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 கல்லூரிகளை தவிர பிற கல்லூரிகளில் தண்ணீர் வடிந்து, மாணவ-மாணவிகள் கற்கும் சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அவ்வாறு மழைநீரால் சூழ்ந்து இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட கலெக்டர் முடிவு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பான கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்த கல்வித்துறை சார்பில் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பள்ளிகள், கல்லூரிகளில் மழை மற்றும் வெள்ளநீர் சூழ்ந்து இருந்தால், அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களிலும் தமிழக அரசு சுமார் ரூ.2 கோடி செலவு செய்து பள்ளிகளை சீரமைத்து உள்ளது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று திட்டமிட்டபடி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் பள்ளிகள் இயங்கின.

    மாணவ-மாணவிகள் ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால் இன்று பாடங்கள் நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக மழை வெள்ளத்தால் மாணவ-மாணவிகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    எத்தனை மாணவர்களுக்கு சீருடைகள் சேதமடைந்துள்ளன என்று ஆய்வு செய்யப்பட்டது. அதுபோல எத்தனை மாணவர்களுக்கு மழை வெள்ளத்தில் சிக்கி பாட புத்தகங்கள் நாசமாகி விட்டன என்று கணக்கிடப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை தொடங்கி மாலை வரை இந்த பணி நடைபெறுகிறது.

    இன்று மாலை கணக்கெடுப்பு முடிந்த பிறகுதான் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு எந்தெந்த பொருட்கள் எவ்வளவு தேவை என்பது தெரியவரும். அதன் அடிப்படையில் பாட புத்தகங்கள், சீருடைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    நாளை (செவ்வாய்க் கிழமை) மாணவ-மாணவிகளுக்கு புதிய பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    Next Story
    ×