search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.6000 நிவாரண நிதி... ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் இன்று பிற்பகல் முதல் டோக்கன் வினியோகம் தொடக்கம்
    X

    ரூ.6000 நிவாரண நிதி... ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் இன்று பிற்பகல் முதல் டோக்கன் வினியோகம் தொடக்கம்

    • ரேஷன் கடைகளுக்கு அரசு ஒரு பட்டியல் அனுப்பி உள்ளது.
    • வருமான வரி செலுத்தக் கூடியவர்கள், அரசு பணியில் அதிகாரியாக இருப்பவர்களின் பெயர் பட்டியலில் இல்லை.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதம் அடைந்தன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இதற்கான டோக்கன் வருகிற 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.

    சென்னையில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீ பெரும்புதூர் (3கிராமங்கள் மட்டுமே) செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், (3கிராமங்கள் மட்டுமே), திருவள்ளூரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களில் உள்ள வீடுகளுக்கு டோக்கன்கள் வழங்கும் பணி இன்று பிற்பகல் முதல் தொடங்குகிறது.

    ரேஷன் கடைகளுக்கு அரசு ஒரு பட்டியல் அனுப்பி உள்ளது. அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. எந்த தேதியில் எந்த நாள் பணம் வாங்க வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வருமான வரி செலுத்தக் கூடியவர்கள், அரசு பணியில் அதிகாரியாக இருப்பவர்களின் பெயர் அந்த பட்டியலில் இல்லை.

    பட்டியலில் பெயர் இடம் பெறாத நபர்கள் ரேஷன் கடையில் கொடுக்கப்படும் படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து அரசிடம் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை கொடுத்து மேல்முறையீடு செய்து நிவாரணம் கோரலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

    டோக்கன் பெற்றவர்களுக்கு வருகிற 16-ந்தேதி முதல் (சனிக்கிழமை) ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பாக இன்று ரேஷன் கடை அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை மூலம் பயிற்சியும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×