search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு உரிமை கொண்டாடி ஓ. பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு
    X

    அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு உரிமை கொண்டாடி ஓ. பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு

    • அ.தி.மு.க. தலைமை கழகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார்.
    • தலைமை கழகத்துக்கு உரிமை கொண்டாடும் விதத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்கிறது.

    கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராக டெல்லி தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். முறையிட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரம் தொடர்பாக ஓ.பி.எஸ். ஐகோர்ட்டில் நாடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

    இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவங்களையடுத்து சீல் வைக்கப்பட்ட தலைமை கழக அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். என இரு தரப்பிலும் ஐகோர்ட்டில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

    இதனை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் அ.தி.மு.க. அலுவலகத்தின் சீலை அகற்றி உடனடியாக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 20-ந்தேதி உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த உத்தரவின்போது அ.தி.மு.க. அலுவலகத்தின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த சம்பவம் அத்துமீறல் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து இருந்தது.

    எம்.ஜி.ஆர். மறைவின் போது இதுபோன்ற பிரச்சினை எழுந்த நேரத்தில் ஜானகி வசம் அ.தி.மு.க. தலைமை கழகம் இருந்ததால் அப்போது சாவி அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவுபடுத்திய நீதிபதி இப்போது எடப்பாடி பழனிசாமி வசமே தலைமை கழகம் இருந்துள்ளது.

    எனவே சாவியை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. இது எடப்பாடிக்கு கிடைத்த வெற்றி என்று அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். ஓ.பன்னீர் செல்வத்துக்கு இது பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார். தலைமை கழகத்துக்கு உரிமை கொண்டாடும் விதத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. தலைமை கழக சாவியை ஒப்படைத்ததற்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பு வக்கீல்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

    அ.தி.மு.க. அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு அது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. தலைமைக்கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததது தவறாகும்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நானே அ.தி.மு.க. தலைமை பொறுப்பில் உள்ளேன். இவ்வாறு ஓ.பி.எஸ். மனுவில் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். கையில் எடுத்துள்ள சட்ட போராட்டங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஓ.பி.எஸ்.சின் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் போது அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்பது தெரிய வரும்.

    Next Story
    ×