search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    5 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு
    X

    5 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

    • திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் கோவில்கள் அத்தனையும் புனரமைக்கின்ற பணிகளில் முழு வீச்சோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
    • தமிழக கவர்னரை பொறுத்தளவில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் திருப்பணி மற்றும் கட்டுமானப் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆட்சி பொறுப்பேற்றபின் 6 ராஜகோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன. தற்போது 6 ராஜகோபுரங்கள் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. 15 ராஜகோபுர பணிகள் தொடங்கப்படும் நிலையில் இருக்கின்றன. ரூ.41.53 கோடி மதிப்பீட்டில் 71 புதிய மரத்தேர்கள் உருவாக்கிடவும், ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் 41 மரத்தேர்களை மராமத்துப் பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில் கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலுக்கு உபயதாரர் நிதி மற்றும் கோவில் நிதியின் மூலம் ரூ.53.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய மரத்தேர் உருவாக்கும் திருப்பணி, ரூ.85.40 லட்சம் மதிப்பீட்டிலான ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் ரூ. 49 லட்சம் மதிப்பீட்டிலான அன்னதானக் கூடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சுமார் ரூ. 4.08 கோடி மதிப்பீட்டில் 14 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ.800 கோடி அளவிற்கு உபயதாரர்கள் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1,093 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது. கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கும் பணிகளில் இதுவரை ரூ.5472 கோடி மதிப்பிலான 5,820 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் நிதியின் மூலம் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    இதுவரை 1,093 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறோம். இப்பணி தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு ஒரு எல்லையே கிடையாது. இந்த ஆட்சி ஏற்பட்டபின் 7,336 கோவில்களுக்கு மண்டல மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுக்களால் திருப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். ஆகவே, 5 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு கும்பாபிஷேகங்கள் இருக்கும்.

    இந்த திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் கோவில்கள் அத்தனையும் புனரமைக்கின்ற பணிகளில் முழு வீச்சோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். 5 ஆண்டுகள் நிறைவுறுகின்ற போது அனைவரும் புருவத்தை உயர்த்தி, வசை பாடுபவர்களும் வாழ்த்துகின்ற ஒரு நல்ல சூழ்நிலை உருவாகும்.

    பொன்மாணிக்கவேல் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பல அப்பாவிகள் சிறை சென்றார்கள். மீடியாவின் விளம்பரத்திற்காக இது போன்ற தவறான செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பணியில் இல்லாத காலத்திலும் அவர் மீது சி.பி.ஐ. முதற்கொண்டு நீதிமன்ற வழக்குகள் நிறைய இருக்கின்றன. தன்னுடைய விளம்பரத்திற்காக துறையின்மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு இருக்கின்றார். அவர் குற்றம் அல்லது தவறுகளை குறிப்பிட்டு சொன்னால் நிச்சயமாக அதற்கு விளக்கம் தரவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கின்றது.

    தமிழக கவர்னரை பொறுத்தளவில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

    அவர் தமிழகத்தினுடைய கவர்னராக செயல்படவில்லை ஆர்.எஸ்.எஸ். - ன் தமிழ்நாடு மாநில தலைவராகவும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராகவும், அவர்களுடைய கொள்கைகளைப் பின்பற்றி இந்த ஆட்சிக்கு எப்படி எல்லாம் தொந்தரவு தர முடியுமோ அந்த வகையில் தொந்தரவு கொடுத்து, மனிதனை பிரித்தாள்வது, சாதி, மத துவேஷங்களை இடுவது போன்றவற்றை தான் ஆளுநர் தன்னுடைய பணியாக மேற்கொண்டு இருக்கின்றார். ஆளுநருக்குண்டான பணிகளிலிருந்து அவர் தவறி விட்டு இது போன்ற காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

    இவ்வாறு சேகர்பாபு தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. வி.பிரபாகர்ராஜா, இணை கமிஷனர் ரேணுகாதேவி, மாநகராட்சி உறுப்பினர் லோகு, கோவில் செயல் அலுவலர் கேசவ ராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×