search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரண் மீது 2 மகன்களை தூக்கி வைத்துவிட்டு கியாஸ் சிலிண்டர் மீது ஏறி நின்று 12 மணிநேரம் உயிருக்கு போராடிய பெண்
    X

    பரண் மீது 2 மகன்களை தூக்கி வைத்துவிட்டு கியாஸ் சிலிண்டர் மீது ஏறி நின்று 12 மணிநேரம் உயிருக்கு போராடிய பெண்

    • நேரம் செல்ல செல்ல உமாமகேஸ்வரி நினைத்தது போலவே நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது.
    • நிலமையை நினைத்து கலங்கிய உமாமகேஸ்வரிக்கும் பயம் சூழ்ந்தது.

    சென்னையை மிதக்க விட்ட வெள்ளத்துக்குள் சிக்கி மீண்டவர்களும், மீட்கப்பட்டவர்களும் திகில் நிறைந்த தங்கள் அனுபவங்களை சொல்வதை கேட்கும் போது மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்துகிறது.

    அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 30 வயதான உமா மகேஸ்வரியும், அவரது 2 மகன்களும் அடங்குவார்கள். இவர் தண்ணீருக்குள் உயிருக்காக போராடியது மிகவும் திகிலானது. அவர் கூறும்போது:-

    எங்கள் சொந்த ஊர் விழுப்புரம். மேற்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசிக்கிறோம். கூலி வேலை பார்க்கிறோம். கடந்த 3-ந்தேதி மாலையில் தொடங்கிய மழை இரவிலும் ஓயாமல் பெய்து கொண்டிருந்தது.

    காலையில் எழுந்ததும் கதவை திறந்து பார்த்தால் வெள்ளக்காடாக காட்சி.

    ஊரெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்திருக்கிறது. இருப்பினும் வெளியே புறப்பட்ட கணவரிடம், இன்றைக்கு வெளியே போகாதீங்க... மழை வெள்ளம் ஒரு மாதிரி மிரட்டுகிறது. வீட்டுக்குள்ளும் வெள்ளம் வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

    ஏய்... இதுக்கு போய் பயப்படலாமா? வீட்டுக்குள் எல்லாம் தண்ணீர் வரப்போவதில்லை. தைரியமாக இருங்கள் என்று கூறி விட்டு அவர் வெளியே கிளம்பி சென்று விட்டார்.

    நேரம் செல்ல செல்ல உமாமகேஸ்வரி நினைத்தது போலவே நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது.

    வெள்ளம் முட்டளவை தாண்டியதும் அவரது மகன்கள் இரண்டு பேரும் 'அம்மா... பயமா இருக்கும்மா...' என்று உமாமகேஸ்வரியை கட்டிப்பிடித்து அழுது இருக்கிறார்கள்.

    நிலமையை நினைத்து கலங்கிய உமாமகேஸ்வரிக்கும் பயம் சூழ்ந்தது. வெளியே எங்கு பார்த்தாலும் கடல் போல் வெள்ளம் நின்றது. சிலர் படகுகளில் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டதை பார்த்ததும் 'எங்களை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்..' என்று அபய குரல் எழுப்பி இருக்கிறார்.

    ஆனால் உமாமகேஸ்வரியின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அவர்கள் தண்ணீரில் தத்தளித்தது யாருக்கும் தெரியவும் இல்லை.

    வெள்ளம் அதிகரித்து மகன்களை மூழ்கடிக்கும் அளவுக்கு வந்து விட்டது. நிலைமை விபரீதமாகி விடும் என நினைத்த உமாமகேஸ்ரி நாம் இறந்தாலும் பரவாயில்லை. நம் பிள்ளைகள் பிழைத்து கொள்ளட்டும் என நினைத்து இருவரையும் வீட்டுக்குள் இருந்த பரண் (லாப்ட்) மீது தூக்கி உட்கார வைத்துள்ளார்.

    மகன்கள் 'அம்மா நீயும் வந்துரும்மா' என்று கதறி இருக்கிறார்கள். "நான் ஏற முடியாதுடா செல்லம். நீங்கள் பயப்படாமல் பத்திரமாக இருங்கள்" என்று அவர்களை தைரியப்படுத்தி இருக்கிறார்.

    காலை 10 மணியளவில் கதவு மட்டத்துக்கும் மேலே வெள்ளம் வந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் எப்படியும் தப்பிக்க முடியாது என்று கருதி இருக்கிறார். ஒரே அறை உள்ள வீடு அது. வேறு எங்கும் செல்லவும் முடியாது.

    கடைசி கட்ட முயற்சியாக கியாஸ் சிலிண்டரை எடுத்து போட்டு அதன் மீது ஏறி நின்றுள்ளார். இப்படியே சுமார் 12 மணி நேரம் நின்றுள்ளார்.

    இரவில் அந்த வழியாக மீட்பு பணிக்கு சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை பார்த்துள்ளார்கள்.

    பயந்து நடுங்கிய அவர்களை பார்த்ததும் 'இனி பயப்படாதீர்கள் நாங்கள் காப்பாற்றி விடுவோம்' என்று தைரியம் அளித்து ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள்.

    உயிர் பிழைத்த 3 பேரும் இன்னும் கொஞ்சம் நேரம் யாரும் வந்திருக்காவிட்டால் செத்திருப்போம் என்று நடுங்கியபடியே கூறினார்கள்.

    Next Story
    ×