search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    363 இடங்களில் மாநகராட்சி ஆய்வு: இனி வெள்ளம் தேங்காமல் இருக்க மாற்று நடவடிக்கைக்கு திட்டம்
    X

    363 இடங்களில் மாநகராட்சி ஆய்வு: இனி வெள்ளம் தேங்காமல் இருக்க மாற்று நடவடிக்கைக்கு திட்டம்

    • சென்னையில் மழைநீர் வடியாமல் 2 நாட்களுக்கு மேலாக நின்ற பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
    • அரும்பாக்கம், கொருக்குப்பேட்டை எழில் நகரில் உள்ள எம்.எம்.டி.ஏ. ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பாதித்தது. மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்ட பகுதியிலும் வெள்ளம் நீர் சீராக செல்லவில்லை. ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டதால் 3 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கி நின்றது.

    இதுவரையில் இல்லாத அளவிற்கு பல பகுதிகளில் தண்ணீர் வடிய பல நாட்கள் நீடித்தது. குறிப்பாக சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் விரைவாக வடியாமல் சிறிது சிறிதாக வடிந்தது.

    இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளானார்கள். மழைநீர் வடிகால் இருந்த போதிலும் பரவலாக வெள்ளம் சூழ்ந்து நின்ற பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.

    தண்ணீர் தேங்கியதற்கான காரணம் என்ன? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். 363 பகுதிகளில் 2 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றுள்ளது. அந்த பகுதிகளை ஆய்வு செய்து மழை நீர் இனி தேங்காமல் இருக்க என்ன வழிமுறைகள், மாற்று திட்டங்களை கொண்டு செயல்படுத்தலாம் என ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.


    நகரின் மையப் பகுதிகளில் பல நாட்களாக வெள்ளம் தேங்கி நின்றது. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் பணிகள் நிறைவு பெற்றாலும் கூட இந்த மழையால் தண்ணீர் தேங்கி நின்றததற்கான காரணம் என்ன? மழை கால்வாய்கள் இணைப்பு முறையாக உள்ளதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதுபற்றி மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) கூறியதாவது:-

    சென்னையில் மழைநீர் வடியாமல் 2 நாட்களுக்கு மேலாக நின்ற பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 363 பகுதிகளில் தண்ணீர் வடியாமல் இருந்துள்ளது. அந்த பகுதிகளில் மழை நீர் வடியாமல் நின்றதற்கான காரணம் என்ன?

    எவ்வளவு நேரத்தில் எத்தனை செ.மீ. மழை பெய்தது என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கு நிரந்தர தீர்வு காண மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணி மழைக்காலம் முடிந்த பிறகு தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மாநகராட்சி தலைமை என்ஜினீயர் ராஜேந்திரன் கூறியதாவது:-

    மழை நீர் வடிகால்வாய்கள் மற்றும் ஆறுகளில் உள்ள அடைப்புகள், கால்வாயின் அளவு, அதன் ஆழம் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். கோடம்பாக்கத்தில் உள்ள அஜிஸ்நர், டெமெல்லோஸ் சாலை, புளியந்தோப்பு அருகில் உள்ள தெருக்கள், ரெட்டேரி ஏரிக்கு பின்புறம், மாதவரம், எம்.ஜி.நகர் சாலை, மணலியில் உள்ள சி.பி.சி.எல். நகர் உள்ளிட்ட சில பகுதிகள் இதில் அடங்கும்.

    அரும்பாக்கம், கொருக்குப்பேட்டை எழில் நகரில் உள்ள எம்.எம்.டி.ஏ. ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அடுத்த வாரம் பெய்யும் மழை தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரிக்கு பிறகு தான் சில பகுதிகளில் வெள்ளம் ஏன் புகுந்தது என ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×