search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. புதிய பொருளாளருக்கு அங்கீகாரம்- ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமிக்கு முதல் வெற்றி
    X

    அ.தி.மு.க. புதிய பொருளாளருக்கு அங்கீகாரம்- ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமிக்கு முதல் வெற்றி

    • ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான சட்ட போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றியாகவே கருதப்படுகிறது.
    • எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம்கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகி இருக்கிறார்.

    கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தின் போது, கட்சியில் இருந்து அதிரடியாக ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அவரது ஒருங்கிணைப்பாளர் பதவியும், பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்ட நிலையில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.

    இந்த தகவலை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வங்கிகளில் முறைப்படி தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வமும் வங்கிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் புதிய பொருளாளராக யாராவது தேர்வு செய்து அறிவித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும், எனது அனுமதியின்றி பணபரி மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும் அதில் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் வங்கிகள் இதனை நிராகரித்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் சீனிவாசனை அ.தி.மு.க. புதிய பொருளாளராக அங்கீகரித்துள்ளன. இதன்மூலம் இனி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அ.தி.மு.க. வங்கி பணபரிவர்த்தனைகளை தங்குதடை இன்றி மேற்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருப்பதுடன் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டுள்ளார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து அவரை எடப்பாடி நீக்கியுள்ள நிலையில் அதற்கு எதிராகவும் சபாநாயகரிடம் ஓ.பி.எஸ். மனு அளித்துள்ளார்.

    இப்படி ஓ.பி.எஸ். தொடர்ந்துள்ள பல்வேறு சட்ட போராட்டங்களை எடப்பாடி பழனிசாமி எதிர் கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் அ.தி.மு.க. புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

    இது ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான சட்ட போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றியாகவே கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதுபோன்று அனைத்து சட்ட போராட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை ஏற்க கூடாது என்று முன்னதாகவே ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிடும் என்று எடப்பாடியின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகள் முடிந்தவுடன் அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்களில் தேர்தல் ஆணையம் இறுதி உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்த விவகாரத்திலும் ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி சார்பில் புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனம் தொடர்பான கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே சபாநாயகர் உத்தரவிட வாய்ப்பு உள்ளது என்றே அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

    அடுத்ததாக பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும் ஓ.பி.எஸ். உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இதிலும் நாங்களே வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    இதன்மூலம் சட்ட போராட்டங்களில் வென்று இன்னும் 4 மாதத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் மூலம் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதி என்றும் அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×