search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.6 ஆயிரம் மழை நிவாரணத்தை தொடர்ந்து பொங்கலுக்கு ரூ.1000 கொடுக்க ஏற்பாடு
    X

    ரூ.6 ஆயிரம் மழை நிவாரணத்தை தொடர்ந்து பொங்கலுக்கு ரூ.1000 கொடுக்க ஏற்பாடு

    • அதிக மழை பெய்ததால் சென்னை உள்பட 4 மாவட்ட மக்களும் தண்ணீரில் தத்தளித்து இப்போதுதான் பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.
    • தமிழ்நாடு முழுவதும் 2.19 கோடி அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை மற்றும் ரூ.1000 கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பொருட்களுடன் ரொக்கப் பணம் ரூ.1000 வழங்கப்படுவது வழக்கம்.

    அதேபோல் அடுத்த மாதம் வர இருக்கிற பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

    இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்து வந்த நிலையில் வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் சில நாட்களுக்கு முன்பு சென்னையிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கு அதிக மழை பெய்ததால் சென்னை உள்பட 4 மாவட்ட மக்களும் தண்ணீரில் தத்தளித்து இப்போதுதான் பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.

    தமிழக அரசும் சென்னை உள்பட 4 மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. வருகிற 16-ந்தேதி டோக்கன் வழங்கி 10 நாட்களில் இந்த பணத்தை மக்களுக்கு வழங்க இருக்கிறார்கள்.

    ரேசன் கடைகள் மூலம் இந்த பணத்தை கொடுத்து முடித்ததும், அடுத்த மாதம் (ஜனவரி) பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 வழங்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 2.19 கோடி அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை மற்றும் ரூ.1000 கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்டது.

    அதேபோல் அடுத்த மாதம் (ஜனவரி) வர இருக்கிற பொங்கல் பண்டிகைக்கும் ரூ.1000 ரொக்கப் பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என தெரிகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை உணவுத்துறை இப்போதே செய்யத் தொடங்கிவிட்டது.

    தமிழகத்தில் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 குடும்பத் தலைவிகளுக்கு ஏற்கனவே மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த பணம் ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி அவரவர் வங்கி கணக்கிற்கு சென்று விடுகிறது. அதே போல் இந்த மாதம் 15-ந் தேதி பெண்களுக்கு ரூ.1000 அனுப்பப்படுகிறது. அடுத்த மாதமும் 15-ந்தேதி ரூ.1000 வந்து விடும்.

    இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) ரேசன் கடைகளில் பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 கிடைக்க உள்ளது. 2.19 கோடி ரேசன் கார்டுதாரர்களுக்கும் இவை வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு 1 வாரத்துக்கு முன்பே இவற்றை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஜனவரி மாதம் 2 முறை பொது மக்களுக்கு பணம் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×