search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவிரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது பற்றி விவாதிப்பதை தடுக்க வேண்டும்- முதல்வருக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
    X

    காவிரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது பற்றி விவாதிப்பதை தடுக்க வேண்டும்- முதல்வருக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

    • காவிரி மேலாண்மை வாரியத்தின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டாலும், மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படாது என்று அறிவிக்கப்படவில்லை.
    • உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பொருளை ஆணையம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கு மேகதாது அணை குறித்து பேச உரிமை இல்லை என்று சொல்லும் கர்நாடக மாநில முதல்-அமைச்சரின் கூற்று உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது மட்டுமல்லாமல் கடும் கண்டனத்திற்குரியது.

    இது ஒருபுறமிருக்க, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர், பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மேகதாது அணை கட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், இதை எதிர்ப்பது மனிதாபிமான மற்ற செயல் என்றும் கூறியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

    தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விடுவதைத் தடுக்கும் வகையில் மேகதாது அணையைக் கட்ட திட்டமிட்டிருக்கும் செயல்தான் மனிதாபிமான மற்ற செயல் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டுமென்ற நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது.

    இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் பெங்களூரு குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டுதான், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாட்டின் பங்கான 192 டி.எம்.சி. நீரை 177.25 டி.எம்.சி. அடியாக குறைத்து உத்தரவிட்டது.

    அதாவது, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கர்நாடகாவின் நீர்ப்பங்கீடு அளவு 270 டி.எம்.சி.யிலிருந்து 284.75 டி.எம்.சி.யாக உயர்த்தப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், மறுபடியும் பெங்களூரு குடிநீர் தேவைக்காக மேகதாது அணை கட்டப்படும் என்று சொல்வது நியாயமற்ற செயல்.

    தற்போது மேகதாது அணை குறித்த பொருள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து 17-06-2022 அன்று நடைபெற உள்ள 16-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக செய்தி வந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதோடு, மேற்படி கூட்டம் 23-06-2002 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியத்தின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டாலும், மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படாது என்று அறிவிக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முக்கியமான பணி என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, காவேரி நீரின் இருப்பை கண்காணிப்பது, பிரித்தளிப்பது, முறைப்படுத்துவது மற்றும் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகும்.

    இதைவிடுத்து, தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான மேகதாது அணை கட்டும் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை வாரியத்தில் விவாதிக்கப்படும் என்று கூறுவது ஆணையத்தின் அதிகார வரம்பை மீறிய செயலாகும். அதிகார வரம்பிற்கு உட்படாத, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பொருளை ஆணையம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது.

    எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×