search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுற்றுப்பயணம்-அடுத்த கட்ட நடவடிக்கை: ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை ஆலோசனை
    X

    ஓ பன்னீர்செல்வம்

    சுற்றுப்பயணம்-அடுத்த கட்ட நடவடிக்கை: ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை ஆலோசனை

    • கொரோனா பாதிப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆதரவாளர்களை திரட்டி முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதால் அவரது அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    • ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனி அலுவலகம் பார்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனித்தனி அணியாக தற்போது செயல்பட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக அறிக்கை மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

    பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நாளை வரும் நிலையில் இருவரும் அதன் முடிவை எதிர்பார்த்து உள்ளனர். கடந்த சில நாட்களாக சொந்த ஊரில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

    கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு சில நாட்கள் ஓய்வில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து அரசியல் ரீதியான பல்வேறு அறிக்கையினை வெளியிட்டு வருகிறார்.

    அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 5 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்த உள்ளார்.

    கோர்ட்டு தீர்ப்பு முடிவை தொடர்ந்து அடுத்த கட்டமாக செய்ய வேண்டிய பணிகள், சுற்றுப்பயணம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக எப்போது சுற்றுப்பயணம் தொடங்கலாம், அதற்கு முன்பாக அனைத்து மாவட்டத்திற்கும் புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    ஏற்கனவே 54 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து உள்ள நிலையில் மீதமுள்ள 21 மாவட்டங்களுக்கு யாரை நியமிப்பது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுப்பது மட்டுமின்றி நடுநிலையில் உள்ளவர்கள், கட்சியில் ஓரம் கட்டப்பட்டவர்களையும் இழுத்து பொறுப்புகளை அறிவிக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.

    கொரோனா பாதிப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆதரவாளர்களை திரட்டி முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதால் அவரது அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனி அலுவலகம் பார்க்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மந்தைவெளியில் 4 ஏக்கரில் ஆபீசுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தையும் ஓ.பன்னீர்செல்வம் ஓரிரு நாட்களில் பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

    15 அறைகள், கொண்ட அந்த இடம் கட்சி செயல்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும் என்று நிர்வாகிகள் கூறியிருப்பதை தொடர்ந்து அதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஓ.கே. சொல்வார் என்று தெரிகிறது.

    தொண்டர்கள் வந்தால் சந்திக்கவும் போதிய இட வசதியும் அதில் இருப்பதால் மந்தைவெளி இடத்தை ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்வார் என்றும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×