search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தடை: ஓ.பி.எஸ். மேல்முறையீடு- அவசர வழக்காக 10-ந்தேதி விசாரணை
    X

    அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தடை: ஓ.பி.எஸ். மேல்முறையீடு- அவசர வழக்காக 10-ந்தேதி விசாரணை

    • சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு எந்தவொரு இடைக்கால தடையும் விதிக்கவில்லை- நீதிபதி
    • கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பெயர், கொடியை பயன்படுத்த வருகிற 30-ந் தேதி வரை இடைக்கால தடை

    அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கியது. நேற்று தனிநீதிபதி என். சதீஷ்குமார் இந்த தடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.

    இதனை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டுள்ளது. அதில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்கவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    அதன்படி நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 10-ந்தேதி) அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர். மகாதேவன், முகமது ஷெரீஃப் ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மேல்முறையீடு மனுவை விசாரிக்கிறது.

    முன்னதாக,

    எடப்பாடி பழனிசாமி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையே கட்சியை நிர்வகிப்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ததை ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்தார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். என்றாலும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வந்தன.

    அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கு மனுவில் கூறியிருந்ததாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் ரத்து செய்யப்பட்டு, பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியும், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது.

    ஆனாலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு அவர் செயல்படுகிறார்.

    எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி, அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுகுறித்து கடிதம் கொடுத்தும், சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம், எனக்கு அருகில் முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க.வுக்கு எதிராகவும் செயல்பட்டுவருகிறார். எனவே, அ.தி.மு.க. பெயரை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்புக்கும் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

    "ஏன் இருதரப்பும் மாறிமாறி ஐகோர்டடு, சுப்ரீம் கோர்ட்டு என்று வழக்குமேல் வழக்கு தொடர்ந்து வருகிறீர்கள். விளம்பரத்துக்காக வழக்குகள் தொடர்கிறீர்களா? ஏற்கனவே அனைத்து அம்சங்களையும் வாதிட்டு, உத்தரவு பெற்ற பின்னர், எதற்காக இந்த வழக்கு?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண், "அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்று கூறி, அறிக்கைகளை வெளியிட்டும், கட்சி நிர்வாகிகளை நியமித்தும் தேவையில்லாமல் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு விட்டார். இதை ஐகோர்ட்டும் உறுதி செய்துள்ளது. அப்படியிருந்தும் அவர் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்'' என்று வாதிட்டார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் ராஜலட்சுமி, "ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். சதீஷ்குமார், "அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு எந்தவொரு இடைக்கால தடையும் விதிக்கவில்லை.

    எனவே, அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு போன்றவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த வருகிற 30-ந் தேதி வரை இடைக்கால தடை விதிக்கிறேன். இந்த வழக்கிற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×