search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விலை அதிகரித்துள்ள போதிலும் தீபாவளிக்கு தங்கம் வாங்க மக்கள் ஆர்வம்... விற்பனை 30 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு
    X

    விலை அதிகரித்துள்ள போதிலும் தீபாவளிக்கு தங்கம் வாங்க மக்கள் ஆர்வம்... விற்பனை 30 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு

    • தீபாவளி பண்டிகையை ஒட்டி உயர்ந்திருந்த தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
    • சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஜவுளி கடைகளில் தங்களுக்கு தேவையான ஆடைகளை தேர்ந்தெடுத்து வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    அதே நேரத்தில் தீபாவளி அன்று மாலையில் வீடுகளில் லட்சுமி குபேர பூஜைக்கும் மக்கள் தயாராகி வருகிறார்கள். அன்றைய தினம் நகைகளை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்தால் கூடுதலாக மேலும் நகைகள் சேரும் என்பது நம்பிக்கை. இதன்படி சென்னையில் பெரும்பாலான வீடுகளில் லட்சுமி குபேர பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இதனால் அட்சய திருதியை நாளில் நகை வாங்குவது போன்று தீபாவளி பண்டிகையையொட்டியும் நகை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் இந்த தீபாவளிக்கும் நகைகளை வாங்க மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது.

    கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி ஒரு பவுன் நகை ரூ.37,920 ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரு பவுன் தங்க நகையின் விலை ரூ.44 ஆயிரத்து 920 ஆக உள்ளது. இதன் மூலம் பவுனுக்கு ரூ.7ஆயிரம் அதிகரித்துள்ள போதிலும் மக்கள் மத்தியில் நகைகளை வாங்குவதில் இருக்கும் ஆர்வம் குறையாமலே இருக்கிறது என்கிறார்.

    சென்னை நகை வியாபாரிகள் சங்கத் தலைவரான ஜெயந்திலால் ஜலானி இது தொடர்பாக அவர் கூறும்போது, தீபாவளியை ஒட்டி மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் தீபாவளி போனஸ் வாங்குபவர்கள், தீபாவளியை கணக்கிட்டு நகை, சுவீட்டுகளை வாங்க சீட்டு போட்டு வைத்திருப்பார்கள். இதன் மூலம் சேரும் தொகையை வைத்து தீபாவளி பண்டிகையொட்டி நகையை வாங்குவதற்கு எப்போதுமே மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    தங்க நகையின் விலை உயர்ந்துள்ள போதிலும் இந்த ஆண்டும் எப்போதும் போல விற்பனை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். 30 சதவீதம் வரையில் தங்க நகைகள் இந்த ஆண்டு விற்பனையாக வாய்ப்பிருப்பதாக ஜெயந்திலால் ஜலானி தெரிவித்தார்.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி உயர்ந்திருந்த தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் பவுனுக்கு ரூ.800 என்கிற அளவுக்கு தங்கத்தின் விலை குறைந்து இருக்கிறது.

    ரூ.45 ஆயிரத்தை தாண்டி இருந்த தங்கத்தின் விலை தற்போது குறைந்திருப்பதாலும் தீபாவளியையொட்டி தங்கம் வாங்கினால் செல்வம் செழிக்கும் என்ற நம்பிக்கையினாலும் பொதுமக்கள் மத்தியில் தங்கம் வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாகவே நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் நகைக்கடைகளில் அதிக அளவில் தங்க நகைகள் விற்பனையாவதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இந்த நகைக்கடைகளிலும் மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் இந்த தீபாவளிக்கு வழக்கமான தங்க விற்பனையை விட கூடுதலாக நகை விற்பனையாகும் என்பதால் புதுப்புது டிசைன்களில் தங்க நகைகள் வந்து உள்ளன.

    தீபாவளிக்கு எப்போதுமே வழக்கமான விற்பனையைவிட 30 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரிக்கும் இந்த ஆண்டும் அதே போன்று விற்பனை இருக்கும் என்று நம்புகிறோம் எனவும் இதன் மூலம் ரூ.500 கோடி தாண்டி நகை விற்பனையாகும் என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக ஆண்கள், பெண்கள் இருவரையும் கவரும் வகையில் புதிய டிசைன் வகைகளும் விற்பனைக்காக வந்துள்ளன. இப்படி தங்க நகைகளை தீபாவளியொட்டி வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் மக்கள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகவே நகைகளை வாங்கி வருகிறார்கள் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தீபாவளிக்கு 1,500 கிலோ அளவுக்கு தமிழகம் முழுவதும் நகைகள் விற்பனையாக வாய்ப்பு இருப்பதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×