search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராகுலுக்கு எதிரான விசாரணையை திசை திருப்பவே போராட்டம்- அண்ணாமலை குற்றச்சாட்டு
    X

    ராகுலுக்கு எதிரான விசாரணையை திசை திருப்பவே போராட்டம்- அண்ணாமலை குற்றச்சாட்டு

    • மு.க.ஸ்டாலின் நம்பர் 1 முதல்-அமைச்சர் என தங்களுடைய ஊடகங்களில் சுயவிளம்பரம் செய்யப்படுகிறது
    • மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு பெயர் மாற்றி அவர்களின் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம், மாவட்ட பார்வையாளர் மோகன் மந்திராச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநாட்டில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    பொள்ளாச்சியில் கோட்டை போன்று மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஒரு சரித்திர மாநாடாக அமையும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைய இந்த மாநாடு தீப்பொறியாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு நல்ல நிலையில் உள்ளது. ஆனால், தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சியிலேயே மக்கள் விரக்தியில் உள்ளனர்.

    பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. கழிப்பறைகள் தொடங்கி, வீடுகள், குடிநீர் இணைப்பு என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் 12 மருத்துவ கல்லூரிகள் ஒரே நாளில் திறக்கப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி தென்னை விவசாயம் சார்ந்த பகுதி. பா.ஜ.க. ஆட்சியில்தான் கொப்பரை தேங்காய்க்கு ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 105 ரூபாய் ஆதார விலையாக வழங்கப்படுகிறது. இந்த விலை மேலும் உயர்த்த முயற்சி செய்யப்படும்.

    உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கூலித்தொழிலாளியாக கடந்த காலங்களில் வேலைக்கு சென்று வந்தார்கள். ஆனால், தற்போதை பா.ஜ.க. ஆட்சியில் இந்தியர்கள் மற்ற நாடுகளுக்கு முதலாளிகளாக செல்லும் நிலை உருவாகி உள்ளது.

    பா.ஜ.க. மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறமுடியாது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மந்திரிகளாக இருந்தவர்கள் ஊழல்வாதிகளாக இருந்தனர்.

    பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து தினசரி 7 ஆயிரம் லோடு கனிமவளங்கள் கேரளாவிறகு கடத்தப்படுகிறது. சோதனைச்சாவடிகள் தனியார் சோதனைச் சாவடிகள் ஆக உள்ளன. போலீசாரின் கரங்கள் கட்டப்பட்டு உள்ளது. கனிம வளங்கள் கடத்தலை தடுக்க பா.ஜ.க. சார்பில் பெரிய அளவிலான போராட்டங்கள் விரைவில் நடத்தப்படும்.

    சிறுமியின் கருமுட்டை விற்பனை, கூட்டுக் கொலைகள் என தி.மு.க.வின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது. பெண்களின் பாதுகாப்பு தி.மு.க. ஆட்சியில் கேள்விக்குறியாக உள்ளது.

    மு.க.ஸ்டாலின் நம்பர் 1 முதல்-அமைச்சர் என தங்களுடைய ஊடகங்களில் சுயவிளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் பொய் சொல்வது போன்றவற்றில் ஸ்டாலின் நம்பர் ஒன் முதல்-அமைச்சராக உள்ளார்.

    பா.ஜ.க. ஆட்சி மீது வைக்கப்படும் பொதுவான ஒரே ஒரு குற்றச்சாட்டு இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் என்பது தான். ஆனால், மணிப்பூர், கோவா போன்ற இடங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருந்தும் பா.ஜ.க.வே வெற்றி பெற்று உள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். பா.ஜ.க.வின் ஆட்சியை பெண்கள் பாதுகாப்பான ஆட்சியாக உணர்கின்றனர்.

    மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு பெயர் மாற்றி அவர்களின் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழக அரசு பெயர் மாற்றம் செய்து பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசின் திட்டங்களாக கூறிவருகிறது.

    தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்கு பல்வேறு துரோகங்கள் இழைக்கப்பட்டுள்ளன. காவிரி பிரச்சினை, கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது போன்ற பல்வேறு துரோகங்களை தமிழகத்திற்கு தி.மு.க. செய்துள்ளது. தற்போது பா.ஜ.க. கண்டிப்பாக கச்சத்தீவை மீட்கும் என்று தெரிந்தவுடன் கச்சத்தீவை மீட்கும் கோரிக்கையை ஸ்டாலின் முன்வைத்து வருகிறார். இது மக்களை ஏமாற்றும் செயல்.

    மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து வரிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி அதிகமாக உள்ளது. தி.மு.க. தங்கள் சுயலாபத்திற்காக வரியை உயர்த்தி உள்ளது.

    ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டம், கொப்பரை தேங்காய்க்கு கூடுதல் விலை பெற்றுத் தருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக பா.ஜ.க. பொதுமக்களுடன் துணை நிற்கும்.

    ராகுல் காந்தியின் ஊழல் விசாரணையை திசை திருப்பும் நோக்கில் தற்போது சில மாநிலங்களில் மத்திய அரசின் புதிய ராணுவ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்த திட்டம் இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகப்படுத்தி எதிர்காலங்களில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள உறுதுணையாக இருக்கும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா 25-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×