search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை வெளிவட்ட சாலைக்காக 374 மரங்கள் வெட்டி அழிப்பு- உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி
    X

    சென்னை வெளிவட்ட சாலைக்காக 374 மரங்கள் வெட்டி அழிப்பு- உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி

    • பசுமை குழுவின் விதிப்படி ஒரு மரத்தை வெட்டினால் 10 செடிகளை புதிதாக நட்டு வளர்க்க வேண்டும்.
    • தங்கள் கண் முன்னாலேயே அந்த மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்த உள்ளூர் மக்கள் வேதனையடைந்தனர்.

    சென்னை:

    திருநின்றவூரில் இருந்து தாமரைப்பாக்கம் வரையிலான நெடுஞ்சாலை வெளிவட்ட சாலையாக அகலப்படுத்தப்படுகிறது.

    இரு வழிச்சாலையாக இருக்கும் இந்த சாலை 4 வழிச்சாலையாக விரிவு படுத்தப்படுகிறது.

    இதற்காக பாக்கம் புதுக்காலனி பகுதியில் 374 மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இந்த மரங்கள் அனைத்தும் 50 முதல் 60 ஆண்டுகள் வயதானவை.

    ரோட்டின் இரு பக்கமும் வரிசையாக நின்ற புளி, வேம்பு, ஆலமரங்கள், அரச மரங்கள் நிழல் தரும் மரங்களாக நீண்ட காலமாக நின்றிருந்தன. இந்நிலையில் தங்கள் கண் முன்னாலேயே அந்த மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்த உள்ளூர் மக்கள் வேதனையடைந்தனர்.

    நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, திருவள்ளூர் மாவட்ட பசுமை குழு மரங்களை வெட்ட அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல் வனத்துறை ஒப்புதல் பெற்று மதிப்பீடுகள் தயார் செய்து முறைப்படி டெண்டர் விடப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டன.

    இந்த சாலை விரிவாக்க பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றனர்.

    பசுமை குழுவின் விதிப்படி ஒரு மரத்தை வெட்டினால் 10 செடிகளை புதிதாக நட்டு வளர்க்க வேண்டும். ரோடு பணிகள் நிறைவடைந்ததும் புதிய மரங்கள் நடும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×