search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து ஆற்றில் ஓடுவதை காணலாம்
    X
    அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து ஆற்றில் ஓடுவதை காணலாம்

    தொடர் மழை- கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து 2,300 கனஅடி தண்ணீர் திறப்பு

    கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பகலில் வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழையும் பெய்து வருகிறது.

    குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வரத்தால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    நேற்று மலையில் இருந்து வந்த தண்ணீரில், அப்பகுதி இளைஞர்கள் மீன்களை பிடித்தனர். மேலும், கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த 2ந் தேதி நீர்வரத்து 12 கனஅடியாக இருந்த நிலையில் தொடர் மழையால், நேற்று காலை நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

    பொதுவாக அணையின் நீர்மட்டம் 48 அடியை எட்டினால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். தற்போது 50 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் இன்றுகாலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    தற்போது அணைக்கு வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்த நீரை அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதே போல ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் தற்போதைய நீர் இருப்பு 41.49 அடியாகும். அணைக்கு நீர்வரத்து 1040 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1040 கன அடியாகவும் உள்ளது.


    Next Story
    ×