search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொழில் அதிபர் பிரேம்குமார் - பிரதீப் குமார் - பிரமோத் குமார்
    X
    தொழில் அதிபர் பிரேம்குமார் - பிரதீப் குமார் - பிரமோத் குமார்

    வி‌ஷ வாயு தாக்கி தொழில் அதிபர்- மகன் உள்பட 3 பேர் பலி

    வி‌ஷ வாயு தாக்கி ஒரே நேரத்தில் 3 பேர் பலியான சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஆவடி:

    ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். தொழில் அதிபரான இவர் சிவசக்தி நகர் 52-வது தெருவில் பெரிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இவரது மனைவி பெயர் ரதி. மகன் பிரதீப்குமார். இவர்களை தவிர பிரேம்குமாருக்கு 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது.

    இன்னொரு மகள் படித்து விட்டு வேலை பார்த்து வருகிறார். பிரேம்குமார் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் இந்த வீட்டில் வசித்து வந்தார்.

    பிரேம்குமார் வீட்டு காம்பவுண்டுக்குள் மரங்களும் உள்ளன. அங்குள்ள காலி இடத்தில் தண்ணீர் தொட்டி ஒன்றையும் வீடு கட்டும்போது அவர் அமைத்திருந்தார். இந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய பிரேம்குமார் முடிவு செய்தார்.

    இதற்காக கூலி ஆட்களை நியமிக்காமல் அவரே நேற்று இரவு தண்ணீர் தொட்டியில் இறங்கி தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். சுத்தம் செய்த பிறகு தண்ணீர் தொட்டியில் பிளீச்சிங் பவுடரை போட்டு அவர் மூடி வைத்ததாக கூறப்படுகிறது.

    இன்று காலை 9.30 மணி அளவில் தண்ணீர் தொட்டியில் மீண்டும் இறங்கிய பிரேம்குமார், பிளீச்சிங் பவுடரை தண்ணீர் ஊற்றி வெளியேற்ற நினைத்திருந்தார். தண்ணீர் தொட்டியில் இறங்கிய அவர் சிறிது நேரத்திலேயே வி‌ஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக மகன் பிரதீப்குமார் தண்ணீர் தொட்டியில் இறங்கினார். அவரையும் வி‌ஷ வாயு தாக்கியது. இதில் அவரும் தண்ணீர் தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் பதட்டம் அடைந்தனர்.

    இதையடுத்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரமோத்குமார் என்பவரை உதவிக்கு அழைத்தனர். அவர் விரைந்து வந்து தண்ணீர் தொட்டியில் சிக்கி இருந்த தந்தை-மகன் இருவரையும் மீட்பதற்காக உள்ளே இறங்கினார்.

    ஆனால் அவரும் வெளியில் வரவில்லை. வி‌ஷ வாயு தாக்கியதில் பிரமோத்குமாரும் தொட்டிக்குள்ளேயே மயக்கம் போட்டு விழுந்தார்.

    இதைத் தொடர்ந்து இன்னொரு பக்கத்து வீட்டுக்காரரான சாரநாத் என்பவர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அவரையும் வி‌ஷவாயு தாக்கியது. இதில் மூச்சடைத்து அவரும் மயங்கினார்.

    இப்படி அடுத்தடுத்து தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 4 பேரும் வெளியில் வராமல் உள்ளேயே மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமாரின் வீட்டில் திரண்டனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி 4 பேரையும் மேலே தூக்கினார்கள். உடனடியாக ஆம்புலன்சில் அவர்களை ஏற்றி சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 4 பேரின் உடலையும் டாக்டர்கள் பரிசோதித்தனர். இதில் தொழில் அதிபர் பிரேம்குமார், அவரது மகனான கல்லூரி மாணவர் பிரதீப்குமார், பக்கத்து வீட்டுக்காரர் பிரமோத்குமார் ஆகிய 3 பேரும் வி‌ஷ வாயு தாக்கியதில் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கினார்கள். வி‌ஷ வாயு தாக்கியதில் மயங்கிய சாரநாத் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.

    ஒரே நேரத்தில் வி‌ஷ வாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் திருமுல்லைவாயல் சிவசக்திநகர் பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உயிரிழந்த 3 பேருமே இளம் வயதுக்காரர்கள் ஆவர். இதையடுத்து தொழில் அதிபர் மற்றும் பிரமோத்குமாரின் குடும்பத்தினர் கதறி அழுதபடி கண்ணீருடன் தவித்து வருகிறார்கள். பிரமோத்குமாருக்கு 34 வயதே ஆகிறது. அவரது மனைவி நித்யா. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில்தான் பிரமோத்குமார் இளம் மனைவியை தவிக்க விடும் வகையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    Next Story
    ×