search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முத்தரசன்
    X
    முத்தரசன்

    தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசு கூறும் காரணம் வினோதமாக இருக்கிறது- முத்தரசன்

    இந்தியாவில் பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களின் ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
    நாகர்கோவில்:

    பொதுவுடமை வீரர் ஜீவாவின் 59-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று காலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே உள்ள ஜீவா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என அனைவராலும் போற்றப்படுபவர் ஜீவானந்தம். அவர் மொழி வாரியாக மாநிலம் அமைய பாடுபட்டவர். குடியரசு தினத்தன்று அனைத்து மாநில ஊர்திகள் அணிவகுப்பில் எந்த பிரச்சினையும் வந்தது இல்லை. ஆனால் மத்திய அரசு தமிழகம், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களின் ஊர்திகளை புறக்கணித்து இருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்தை சேர்ந்த மகாகவி பாரதி, கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரம்பிள்ளை, வேலுநாச்சியார் ஆகியோர் கொண்ட ஊர்தியை அனுமதிக்கவில்லை.

    இதற்கு மத்திய அரசின் விளக்கம் வினோதமாக இருக்கிறது. மகாகவி பாரதி, வ.உ.சி., வேலு நாச்சியார் ஆகியோரை வெளிநாட்டினர்களுக்கு தெரியாது என்று விளக்கம் அளித்துள்ளனர். இந்தியாவில் பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களின் ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழக ஊர்திகளை அனுமதிக்குமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தமிழக ஊர்திகளுக்கு அனுமதி வழங்கும் என்று கருதுகிறோம். அனுமதிக்கவில்லை என்றால், எதிர்வினையை மத்திய அரசு சந்திக்கும். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழக அரசின் அணுகுமுறை நன்றாக இருக்கிறது. இதனால் தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவு வருகிறது. மாற்றுதிறனாளி லாக்கப் இறப்பு குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ரூ.10 லட்சம் நிவாரணமும் வழங்க உத்தரவிட்டுள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தமிழகத்தில் தீர்வு காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஜீவா மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முத்தரசன் மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, நகர செயலாளர் இசக்கி முத்து, நெல்லை மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், வக்கீல் அணி மாநில உதவி செயலாளர் முருகன், ஏ.ஐ.டி.யு.சி. அனில்குமார், கலை இலக்கிய மன்ற நிர்வாகிகள் சொக்கலிங்கம், செந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×