search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளத்தில் மின்னல் தாக்கி பலியான ஆடுகள்
    X
    கூடங்குளத்தில் மின்னல் தாக்கி பலியான ஆடுகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடரும் மழை- மின்னல் தாக்கி 19 ஆடுகள் பலி

    கூடங்குளம் அருகே திருவம்பலாபுரத்தில் பலவேசம் என்பவருக்கு சொந்தமான 19 ஆடுகள் மின்னல் தாக்கி பலியானது.
    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது.

    பின்னர் மழை நின்ற நிலையில் இரவு 10 முதல் நள்ளிரவு வரை மீண்டும் மழை பெய்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கியது.

    கூடங்குளம் அருகே திருவம்பலாபுரத்தில் பலவேசம் என்பவருக்கு சொந்தமான 19 ஆடுகள் மின்னல் தாக்கி பலியானது.

    தொடர் மழையால் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதிகளிலும், ஊருடையான் குடியிருப்பு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

    நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் தரைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மாவட்டத்தின் புறநகர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

    இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது.

    அதிகபட்சமாக தூத்துக்குடியில் 44 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 43 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 135.75 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1104.17 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1404.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 136.97 அடியாகவும், மணிமுத்தாறு நீர்மட்டம் 79.10 அடியாகவும் உள்ளது.

    தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக கடனாநதி அணை இன்று 2 அடி உயர்ந்து 82 அடியாகவும், கருப்பாநதி 68.57 அடியாகவும், ராமநதி 72.25 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 127.25 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ளது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.



    Next Story
    ×