search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்- ராமதாஸ்

    அரசு நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்துவதற்கான அருமருந்தாகக் கருதப்படும் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அண்மையில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில், அரசின் சேவைகளைப் பெற கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாக 93 விழுக்காட்டினரும், அரசின் சேவைகளை பெறுவதில் ஏற்பட்ட அனுபவம் மனநிறைவளிக்கும் வகையில் இல்லை என்று 82 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர்.

    அரசின் சேவைகளைப் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்க முடிந்த தகவல் தொழில்நுட்பத்தால், இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. தொழில்நுட்பத்தால் தீர்க்க முடியாத இந்த சிக்கல்களை பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் தீர்க்கும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடாகும்.

    தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் நிறைவடையவிருக்கும் நிலையில், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையும், வலியுறுத்தலும் ஆகும். சாதிச்சான்றிதழ் பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்பட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட வேண்டும். குறித்த காலத்தில் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் வகை செய்யப்பட வேண்டும்.

    அரசு நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்துவதற்கான அருமருந்தாகக் கருதப்படும் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் மக்களுக்கு அரசின் சேவைகள் எந்தத் தடையும் இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×