search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து ஏற்படுத்திய லாரி - தண்ணீர் லாரி மோதியதில் நொறுங்கி கிடக்கும் வேன்
    X
    விபத்து ஏற்படுத்திய லாரி - தண்ணீர் லாரி மோதியதில் நொறுங்கி கிடக்கும் வேன்

    ஓட்டப்பிடாரம் அருகே வேன்-தண்ணீர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பெண்கள் பலி

    இன்று காலை வேலைக்கு சென்ற 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், புதியம் புத்தூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்கள் தினமும் வேன் மூலம் வேலைக்கு செல்வது வழக்கம். இன்று வழக்கம் போல் அவர்கள் வேன் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டனர். புதியம் புத்தூரை சேர்ந்த பாபு (26) என்பவர் வேனை ஓட்டி சென்றார். இதில் ஆண்கள், பெண்கள் என 15 பேர் சென்றனர்.

    காலை 7 மணி அளவில் வேன் புதியம்புத்தூர் அருகே உள்ள சில்லாநத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து புதியம்புத்தூர் நோக்கி ஒரு தண்ணீர் லாரி வந்தது. லாரியை புதியம்புத்தூரை சேர்ந்த பண்டாரம் (41) என்பவர் ஓட்டி வந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரியும், வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சில்லா நத்தத்தை சேர்ந்த கணேசன் மனைவி செல்வராணி (43), முப்பிலிவெட்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சந்தனலட்சுமி (48) ஆகியோர் பலியானார்கள். மற்றவர்கள் உடலில் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு புதியம்புத்தூர் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    செல்லும் வழியிலேயே ரவீந்திரன் மனைவி காமாட்சி என்ற ஜோதி (40) உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நடுவக்குறிச்சியை சேர்ந்த அடைக்கலராஜ் மனைவி மணிமேகலை (20) என்பவரும் பரிதாபமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    டிரைவர்கள் பாபு, பண்டாரம் மற்றும் தொழிலாளர்கள் பொன் இசக்கி (46), செல்வமுருகன் (20), லிங்கம்மாள் (27), சந்தனமாரி (35), ராமலெட்சுமி (39), வனிதா (19), காமாட்சி உள்பட 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தொடர்ந்து போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று காலை வேலைக்கு சென்ற 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×