search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மத்திய மந்திரி எல் முருகன் திறந்து வைத்த காட்சி
    X
    நெல்லை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மத்திய மந்திரி எல் முருகன் திறந்து வைத்த காட்சி

    மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு- மத்திய மந்திரி எல்.முருகன்

    தமிழகத்தில் கடல்பாசி திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
    நெல்லை:

    நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அலுவலகம் திறப்பு விழா இன்று நெல்லையில் நடந்தது.

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற முடியாது என்று கூறினார்கள். பொய் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் தமிழக சட்டசபையில் இன்று பா.ஜ.க.வின் 4 உறுப்பினர்கள் சட்டசபையில் அமர்ந்து உள்ளார்கள். இவர்கள் பணி தமிழக மக்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

    ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக இவர்கள் இருப்பார்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள கடல்சார் மீனவர்கள் திருத்தச்சட்டம் மிகவும் சிறப்பான சட்டம் ஆகும். இது குறித்து மீனவர்களிடம் விளக்கி கூறி வருகிறோம்.

    கடலில் 12 கடல் மைல் தூரம் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும். 12 முதல் 200 கடல் மைல்கள் வரை மத்திய அரசின் கீழ் வரும்.

    எனவே இந்தச் சட்டத்தை ஒழுங்கு படுத்தி வருகிறோம். இதன்மூலம் மீனவர்கள் வளர்ச்சி மேம்படும். உள்நாட்டில் மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும். அனைத்து மீனவர்களுக்கும் இந்த சட்டம் பாதுகாப்பாக இருக்கும். இன்னும் இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. கருத்து கேட்பு நிலையில் உள்ளது. அனைவரிடமும் கருத்து கேட்டு அதன் பிறகுதான் இந்த சட்டம் நிறைவேற்றப்படும்.

    எனவே மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை. மீனவர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் மானியம் வழக்கம் போல் தொடரும். இதுவரை இல்லாத அளவு மத்திய அரசு மீனவர்கள் நலனுக்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

    தமிழகத்தில் கடல்பாசி திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பாரம்பரிய மீனவர்களின் இந்த சட்டம் பாதிக்கும் என்று பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. வெளிநாட்டு மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடிப்பதை இந்த சட்டம் தடுக்கும்.

    கொச்சியில் உள்ளது போல் தூத்துக்குடியிலும் மீன்பிடி படகுகள் கட்டுமான தளம் அமைக்க பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மத்திய மந்திரி முருகன் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஆகியோர் நெல்லை சந்திப்பில் உள்ள இந்து மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு பாரதியார் படித்த வகுப்பறையை பார்வையிட்டனர்.

    Next Story
    ×