search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்றுக்கு ஆளாகும் உடல்பருமன் நோயுள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து அதிகம்

    கொரோனா தொற்றுக்கு ஆளாகும் உடல் பருமன் நோயுள்ளவர்களுக்கு, உயிருக்கு அதிக ஆபத்து உள்ளதாக செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் கூறினர்.
    சென்னை:

    உலக செரிமான நலதினம் ஒவ்வொரு ஆண்டும் உலக இரைப்பை, குடலியல் அமைப்பு (டபுள்யு.ஜி.ஓ.) சார்பில் மே 29-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இரைப்பை, குடலியல் துறைக்கான முக்கிய பிரச்சனை பற்றி ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான ஆய்வுப்பொருள், உடல்பருமன் நோயாகும். உலக செரிமான நல தினத்தின் நோக்கம், உடல்பருமன் பற்றியும், அதன் மூலம் இணை நோய்கள் அதிகமாவது பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்.

    தமிழ்நாடு இரைப்பை, குடலியல் மருத்துவர் அறக்கட்டளை சார்பில் நேற்று உலக செரிமான நலதினம் கடைப்பிடிக்கப்பட்டது. உடல் பருமன் நோய் தொடர்பாக ஆன்லைன் மூலம் நடந்த கருத்தரங்கத்தில், செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமியை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மருத்துவர்கள் குழுவினர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி மற்றும் செரிமான நலத்துறை சிகிச்சை நிபுணரான டாக்டர்கள் பி.கே.ரெட்டி, கவுர்தாஸ் சவுத்திரி, வி.பாலசுப்பிரமணியன், பி.பிரமநாயகம் மற்றும் கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகன், டாக்டர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    ஒரு காலகட்டத்தில் உடல் பருமன் என்பது, செழிப்பான வாழ்க்கையை குறிக்கும் அறிகுறியாக காணப்பட்டது. ஆனால் உடல் பருமன் ஆவது, பல்வேறு வகை புற்றுநோய்கள் உருவாகும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது. ஈரலைச் சுற்றி கொழுப்பு சேர்வதன் மூலம் செரிமான பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்க்கு ஆளாக வேண்டியதாகிவிடுகிறது.

    போர்கள், பஞ்சம் இருந்த காலகட்டத்தில் உடல் பருமன் நோயை காண்பது அரிதாக இருந்தது. ஆனால் இன்று 3 வேளை உணவு மற்றும் பீசா, பர்கர் என்று கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதால் இந்த நோய்க்கு ஆளாக நேரிடுகிறது.

    ஏழைகள் அதிகம் வாழும் ஆப்ரிக்காவில் உடல் பருமன் நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவு. உடல் பருமன் நோயினால் 49 சதவீதம் இருதய நோய்கள், 38 சதவீதம் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள், 19 சதவீதம் புற்றுநோய் ஏற்படுகின்றன.

    உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத்தான் கொரோனா தொற்று, உயிருக்கு அதிக ஆபத்தை உருவாக்குவதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள, உடல் பருமன் நோயுள்ளவர்களுக்கும் அதே அளவுக்கு ஆபத்து உள்ளது. இதற்கான தரவுகள் தற்போது கிடைத்து வருகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவு, வெண்டிலேசன் ஆகிய சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு இவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    பரம்பரை பிறப்பு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடல் பருமனுக்கு மிகுந்த தொடர்புடையவையாக உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதோடு, சோம்பேறித்தனம் அதிகமுள்ள நாடாக விளங்குகிறது. அதிக கொழுப்புள்ள உணவுதான் உடல் பருமனுக்கு காரணம் என்று நினைக்கிறோம். ஆனால் முதல் எதிரி சர்க்கரைதான். ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் பேஸ்டரிஸ் என்ற வகை கேக்குகள் உடல் பருமனுக்கு ஏதுவாக உள்ளன.

    உடல் பருமனில் இருந்து விடுபட விரதம் இருக்கலாம். சைக்கிளிங், டிரண்ட் மில் நடைப்பயிற்சி போன்ற உடல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கலோரி குறைவாக உள்ள உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

    உடல் பருமன் நோயை குணப்படுத்த மாத்திரைகள், ஊசி மருந்துகள் உள்ளன. அதற்கான டாக்டரின் கண்காணிப்பில் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். இரைப்பையை சுருக்கும் அறுவை சிகிச்சைகளும் உள்ளன. இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அறுவை சிகிச்சைகள் அதிக அளவில் பின்பற்றப்படுகின்றன.

    இது உடலில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிலருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி என்ற அறுவை சிகிச்சை தேவைப்படலாம். உடல் பருமனைப் பற்றிய விழிப்புணர்வை குழந்தைப் பருவத்தில் இருந்தே ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அறிவுரை வழங்கினர்.
    Next Story
    ×