search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    நீடாமங்கலம் அருகே கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை மீண்டும் தொடங்க முயற்சி- கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

    நீடாமங்கலம் அருகே அரிச்சபுரம் கிராமத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை மீண்டும் தொடங்க முயற்சிக்கும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நீடாமங்கலம்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்ட எண்ணெய் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், அரசியல் கட்சியினர் கடந்த ஆண்டு பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதைத்தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயத்தை சீரழிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரிச்சபுரம் கிராமத்தில் ஏற்கனவே 8 ஆண்டுகளுக்கு முன்பாக ஓ.என்.சி.ஜி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டது.

    இந்த பகுதியில் எண்ணெய் கிணறுகள் காலாவதியாகி விட்டதாக கூறி ஓ.என்.சி.ஜி. நிறுவனம் அந்த பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தில் ஓ.என்.சி.ஜி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு உபகரணங்களும் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தமிழார்வன், ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதை அறிந்த ஓ.என்.சி.ஜி. அதிகாரிகள் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 நாட்களுக்குள் இந்த பணியை நிறுத்திவிடுகிறோம் என உறுதியளித்த பின்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

    இதுகுறித்து மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில், ‘ஓ.என்.ஜி.சி. இந்த இடத்தில் எந்த பணியை தொடங்கினாலும் இந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்தை கேட்ட பின்புதான் தொடங்க வேண்டும். அது வரையிலும் எந்த உபகரன பொருட்களும் இங்கு வரக்கூடாது. மீறினால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்’ என்றார்.
    Next Story
    ×