search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகள்
    X
    லாரிகள்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு- தென்மண்டல லாரி உரிமையாளர்கள் இன்று அவசர ஆலோசனை

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சேலத்தில் இன்று மாலை தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேளன ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
    சேலம்:

    பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது டீசல் விலை 86 ரூபாயையும், பெட்ரோல் விலை 92 ரூபாயையும் நெருங்கி உள்ளது.

    டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் டீசல் விலை உயர்வால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகளில் சுமார் ஒன்றரை லட்சம் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    லாரி தொழிலை நடத்த முடியாமல் அதன் உரிமையாளர்கள் அந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் டீசல் விலையை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும், அப்படி கொண்டு வராவிட்டால் நாடு முழுவதும் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளது.

    அந்த போராட்ட அறிவிப்புக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக சேலத்தில் இன்று (18-ந் தேதி ) மாலை 3 மணிக்கு தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேளன ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் சம்மேளன பொதுச்செயலாளர் ஈஸ்வரப்பா, தலைவர் கோபால் நாயுடு மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் லாரி உரிமையாளர்கள் சங்க முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்பு மற்றும் டீசல் விலையை குறைக்காவிட்டால் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் போராட்ட அறிவிப்புக்கு தென்மண்டல லாரி உரிமையாளர்கள் முழு ஆதரவு தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×