search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தலா 3 டி.எம்.சி. நீர் சேமிப்பு

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளிலும் தலா 3 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதால், வருகிற 2021-ம் ஆண்டு குடிநீருக்கு பஞ்சம் இல்லாத ஆண்டாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    சென்னை:

    சென்னை மாநகர பகுதிகளுக்கு பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டுகளில் போதுமான மழை இல்லாததால் ஏரிகளில் நீர் சேமிப்பின் அளவு மிக குறைவாகவே இருந்து வந்தது. தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் தவணைக்கான தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் வடகிழக்கு பருவ மழையும் பெய்து வருவதால், கடந்த சில வாரங்களாக ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதேபோல் புதிதாக திறக்கப்பட்ட கன்னன்கோட்டை தேர்வாய்கண்டிகை நீர்தேக்கத்திலும் நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், மழை தண்ணீரும் ஏரிக்கு வருவதால் தற்போது 5 ஏரிகளிலும் முழு கொள்ளளவை எட்டும் அளவுக்கு நீர் சேமிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவ மழை மூலம் ஏரிகளுக்கு நன்றாக தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. பூண்டி ஏரிக்கு 1,443 கனஅடியும், சோழவரம் 36 கனஅடி, புழல் 143 கனஅடி மற்றும் செம்பரம்பாக்கம் 116 கனஅடி, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை 75 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அதேநேரம் குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 1,276 கன அடி, புழல் 143 கனஅடி, செம்பரம்பாக்கத்தில் இருந்து 116 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த 24 மணிநேரத்தில் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு பதிவாகவில்லை. 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி (11.75 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட 5 ஏரிகளிலும் சேர்த்து தற்போது 10 ஆயிரத்து 447 மில்லியன் கனஅடி (10.44 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஆயிரத்து 389 மில்லியன் கனஅடி (5.38 டி.எம்.சி.) நீர் மட்டுமே இருந்தது.

    ஏரிகளில் 88.86 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. சராசரியாக மாதத்துக்கு ஒரு டி.எம்.சி. என்றாலும் தற்போது இருக்கும் நீர் 10 மாத தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதனால் வருகிற 2021-ம் ஆண்டு குடிநீருக்கு பஞ்சம் இல்லாத ஆண்டாக இருக்கும். தற்போது ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளிலும் தலா 3 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் சேமிக்கப்பட்டு உள்ளதால் இந்த ஏரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஏரிகளை பார்வையிட செல்வதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
    Next Story
    ×