search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கேபி அன்பழகன்
    X
    அமைச்சர் கேபி அன்பழகன்

    சூரப்பா விவகாரத்தில் கமல்ஹாசன் உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார்- அமைச்சர் கே.பி.அன்பழகன்

    அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார் என்று தர்மபுரியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
    தர்மபுரி:

    தமிழக உயர்க்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தர்மபுரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் நடிகர் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்கிறார். கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்திக்க போகிறோம் என்பதற்காக எதை எதையோ பேசி கொண்டிருக்கிறார். சூரப்பா மீது ஊழல் புகார் எழுந்ததால் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போது என்னிடத்தில் எந்த ஊழலும் இல்லை. நான் நியாயமானவன், அப்பழுக்கற்றவன், நான் விசாரணையை எதிர் கொள்வேன் என்று கூறிய சூரப்பா மதுரையில் ஒருவரை வைத்து வழக்கு போட வைத்து, அதில் தன்னையும் இணைத்து கொண்டுள்ளார்.

    ஆனால் மதுரைக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் சம்பந்தமில்லை. அவர் வழக்கு போட வேண்டுமென்றால் சென்னையில் வழக்கு தொடுத்து இருக்க வேண்டும். அவரது மடியில் கனமில்லை என்றால் வழியில் அவர் பயப்படத் தேவையில்லை. பேராசிரியர்கள் நியமனத்தில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அதேபோல் துணைவேந்தர் நியமனத்திற்கும், அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

    துணைவேந்தர் நியமனத்திற்கு தேடுதல் குழுவை அமைப்பது மட்டுமே அரசின் பணி. இதில் தேடுதல் குழு தான் விண்ணப்பங்களை பெற்று, 3 பேரை தேர்வு செய்து கவர்னருக்கு அனுப்பி வைக்கிறது. எனக்கு பயமில்லை, விசாரணையை எதிர் கொள்கிறேன் என்று சொன்னவர், எதற்காக மதுரையில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். பேராசிரியர் நியமனத்தில் ஏற்கனவே முன்னாள் துணை வேந்தர் கொடுத்த பத்திரிகை பேட்டிக்காக, அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அரசு மீது ஏதேனும் புகார் கூற வேண்டும் என்பதற்காகவே நடிகர் கமல்ஹாசன் பேசி கொண்டிருக்கிறார். அவர் உண்மை நிலையை அறிந்து அந்த அறிக்கையை சொல்லவில்லை.

    இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
    Next Story
    ×