search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் இறந்த ராணுவ வீரர் கருப்பசாமி உருவப்படத்துக்கு கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.
    X
    விபத்தில் இறந்த ராணுவ வீரர் கருப்பசாமி உருவப்படத்துக்கு கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.

    ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி- கனிமொழி எம்.பி. வழங்கினார்

    காஷ்மீரில் விபத்தில் இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியை அடுத்துள்ள தெற்கு திட்டங்குளம் சண்முகாநகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். காஷ்மீர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி நேற்று முன்தினம் நடந்த விபத்தில் இறந்தார்.

    இதனால் அவரது கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. ராணுவ வீரர் கருப்பசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கிராமத்தில் மக்கள் கருப்புக்கொடி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிலையில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று தெற்கு திட்டங்குளம் சண்முகாநகருக்கு சென்று, கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியும் வழங்கினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், ‘கருப்பசாமி நாட்டுக்காக தனது இன்னுயிரை இழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தி.மு.க. என்றைக்கும் அவர்களுடன் இருக்கும். கருப்பசாமியின் குழந்தைகளின் கல்விச்செலவை தி.மு.க. ஏற்றுக்கொள்ளும்’ என்று தெரிவித்தார்.

    அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர செயலாளர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன், ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செல்வ மணிகண்டன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் பாரதி ரவிக்குமார், பொன்னுத்துரை, கிளை பிரதிநிதி மாதேஸ்வரன், கிளைச் செயலாளர்கள் சார்லஸ், தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×