search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த கோரிய வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினர் சூர்யமூர்த்தி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க., பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஒருங்கிணைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்- அமைச்சர் கே.பழனிசாமியும் இருந்து வருகின்றனர்.

    அ.தி.மு.க. என்ற மிகப்பெரிய கட்சியை தொண்டர்களே வழி நடத்த முடியும். கட்சியின் விதிமுறைகளின்படி அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்து பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாது.

    ஆனால் இந்த விதிமுறைகளுக்கு புறம்பாக கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு இரட்டை தலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள இக்காலகட்டத்தில் இந்த இரட்டை தலைமையை கட்சியின் உண்மையான அடிப்படை தொண்டர்கள் யாரும் ஏற்கவில்லை. பொதுச்செயலாளர் என்ற ஒற்றை தலைமையைத்தான் எதிர்பார்க்கின்றனர்.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியான அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச்செயலாளர் உள்ளிட்ட எந்த பதவிகளுக்கும் உட்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாகவும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை நீடித்தால் கட்சி பெரிய அளவில் ஆபத்தை சந்திக்க நேரிடும்.

    எனவே, உட்கட்சி தேர்தலை நடத்தி கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்பும் வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அவைத்தலைவர் ஆகியோர் புதிதாக நிர்வாகிகள் யாரையும் நியமிக்கக்கூடாது என தடை விதிக்க வேண்டும். அ.தி.மு.க.வின் செயல்பாடுகள், நிர்வாகிகளின் நியமனம் குறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகாததால், இந்த வழக்கு விசாரணையை நீதிபதி 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×