search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பூந்தமல்லி அருகே மூதாட்டியை ஏமாற்றி ரூ.40 லட்சம் வீடு-பணம் அபகரிப்பு: வாடகைக்கு குடியிருந்தவர் கைது

    மூதாட்டியை ஏமாற்றி ரூ.40 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் ரூ.12 லட்சத்தை அபகரித்ததாக அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா(வயது 81). இவர், தபால் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு 2 மகள்கள். இருவரும் திருமணம் ஆகி தங்கள் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வருகின்றனர்.

    சரோஜா தனக்கு வரும் பென்ஷன் பணத்தை வைத்தும், தனக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்தும் வாழ்ந்து வருகிறார். இவருக்கு அருகில் உள்ள இவரது மற்றொரு வீட்டில் முனுசாமி என்ற ஸ்டீபன்(40) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த வீட்டை அளக்க வந்தனர். அப்போது இந்த வீட்டை மூதாட்டி சரோஜா தனக்கு எழுதி கொடுத்து விட்டதாக ஸ்டீபன் தெரிவித்தார். இதுகுறித்து அவரது மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோதுதான் சரோஜா ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசில் புகார் அளித்ததின்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் விசாரணையை மேற்கொண்டார்.

    அதில், சரோஜா தனக்கு சொந்தமான வீட்டில் பல ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்த ஸ்டீபனை, தனது மகனைபோல் நினைத்து பழகி உள்ளார். வயதானதால் வெளியே செல்ல முடியாத சூழலில் தனது வங்கி கணக்கில் உள்ள பென்சன் பணம் ரூ.5 ஆயிரம் எடுப்பதற்கு காசோலை கொடுத்தால் அதனை ரூ.50 ஆயிரமாக திருத்தி பணத்தை ஏமாற்றி எடுத்து உள்ளார்.

    இவ்வாறு ரூ.4 லட்சம் வரை அபகரித்ததுடன், தான் வாடகைக்கு குடியிருக்கும் சரோஜாவுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் தனது பெயருக்கு மாற்றி எழுதி உள்ளார். மேலும் அவருக்கு சொந்தமான 6 வீடுகளில் இருந்து வரும் வாடகை பணம் ரூ.8 லட்சத்தையும் மோசடி செய்துள்ளதாகவும், வீட்டில் இருந்த மற்றொரு நிலத்தின் ஆவணங்களையும் எடுத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து மூதாட்டியை ஏமாற்றி வீடு, பணத்தை அபகரித்த ஸ்டீபனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×