search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு
    X
    பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு

    பவானி ஆற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பில்லூர் அணை உள்ளது. நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது அணையின் நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும்

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பர் பவானியில் 308 மில்லிமீட்டர், அவலாஞ்சியில் 120 மில்லி மீட்டர், குந்தாவில் 55 மில்லி மீட்டர், எமரால்டு 112 மில்லிமீட்டர், கெத்தையில் 5 மில்லி மீட்டர், சின்னக்கொரையில் 5 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்று காலை 6 மணி நிலவரப்படி பில்லூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 95 அடியை எட்டியது. அணையில் மின் உற்பத்திக்காக 2 எந்திரங்கள் இயக்கப்பட்டன. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறியது. ஆனாலும் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காலை 8 மணிக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 97 அடியை எட்டியது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி பில்லூர் அணையின் 4 மதகுகள் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே ஆற்றின் கரையோர பகுதிகளை தாசில்தார் சாந்தாமணி, வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி, பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நகரம் மற்றும் கிராம பகுதிகளில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலமும், தண்டோரா மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பில்லூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக அணைக்கு வரும் 17 ஆயிரம் கனஅடிநீரும் வெளியேற்றப்படுகிறது.
    Next Story
    ×