search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிமெண்டு தடுப்புகள் அகற்றப்பட்டதையும், அந்த வழியாக பழனியாண்டி உடல் எடுத்துச்செல்லப்பட்டதையும் படத்தில் காணலாம்
    X
    சிமெண்டு தடுப்புகள் அகற்றப்பட்டதையும், அந்த வழியாக பழனியாண்டி உடல் எடுத்துச்செல்லப்பட்டதையும் படத்தில் காணலாம்

    பெரம்பலூர் அருகே தெருப்பாதை பிரச்சினையால் பிணத்தை எடுத்து செல்ல தடை

    பெரம்பலூர் அருகே தெருப்பாதை பிரச்சினையால் பிணத்தை எடுத்து செல்ல தடை விதித்தது குறித்து வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 60). அதே தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி(70). பெரியசாமிக்கு சொந்தமான நிலத்தை அதே தெருவை சேர்ந்த மக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்தனர். இதனிடையே, பெரியசாமிக்கும், பழனியாண்டிக்கும் இடையே பாதை பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக பழனியாண்டி நேற்று இறந்தார். இதை அறிந்த பெரியசாமி, வீட்டுக்கு முன் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை சிமெண்டு தடுப்புகளை கொண்டு சுவராக வைத்து பாதையை அடைத்துவிட்டார். இதனை தொடர்ந்து, பழனியாண்டியின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச்செல்ல முடியாததால், அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் வருவாய் ஆய்வாளர் இளங்கோ, கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று, பெரியசாமியிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதில் பிரேதத்தை எடுத்துச் செல்ல தற்காலிகமாக தடுப்பு சுவரை அகற்றி பாதை வசதி ஏற்படுத்தவும், மேற்கொண்டு பாதை தேவைப்படும் பட்சத்தில் சட்டரீதியாக பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்பிறகு தடுப்புச்சுவர் அகற்றப்பட்டு முதியவரின் உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதட்டம் நிலவியது.
    Next Story
    ×