search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாசிலிசம்பாப் மருந்து
    X
    டாசிலிசம்பாப் மருந்து

    உயிர் காக்கும் மருந்துகள் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை

    உயிர் காக்கும் மருந்துகள் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழப்புகளின் சதவீதம் வெகுவாக குறைந்திருக்கிறது.
    மதுரை:

    தென் மாவட்டங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரையில் நேற்றைய நிலவரப்படி 3,776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 994 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி, தோப்பூர் மருத்துவமனை மற்றும் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமைப்படுத்துதல் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தவிர வீட்டு தனிமைப்படுத்த நிலையிலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு டாசிலிசம்பாப், ரெம்டெசிவிர் மற்றும் ஏனாக்ஸாபரின் உள்ளிட்ட உயிர்காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. அதன்படி அந்த மருந்துகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 90 குப்பிகள் ரெம்டெசிவிர், டாசிலிசம்பாப், ஏனாக்ஸாபரின் உள்ளிட்ட மருந்துகள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறது.

    இந்த மருந்துகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, யார் யாருக்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி விளக்கமளித்து கூறியதாவது:-

    தமிழக அரசு பரிந்துரைத்துள்ள உயிர்காக்கும் மருந்துகள் மதுரைக்கும் குறிப்பிட்ட அளவு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. அதாவது நோயாளியின் வயது மற்றும் நோய் பாதிப்பு மற்றும் அவருக்கு வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா என்பது உள்பட பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த மருந்துகள் அவர்களுக்கு செலுத்தப்படுகிறது.

    இந்த மருந்துகள் எந்தெந்த நோயாளிகளுக்கு தேவை என்பது குறித்து ஆய்வு செய்ய டாக்டர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த டாக்டர் குழுவினர் நோயாளிகளின் உடல்நிலை குறித்து பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து அதன் பின்னர் இந்த மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

    மதுரையை சேர்ந்த 54 வயதுடைய ஆண், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் இருந்தது. மேலும் நோய் தொற்றும் தீவிரமாக இருந்தது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை 30 நாட்களாக போராடி தற்போது குணமடைய செய்திருக்கிறோம். அவருக்கு 22 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் வழங்கியிருக்கிறோம். இதுபோல் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பல்வேறு விலையுயர்ந்த மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தின் பெயர் டாசிலிசம்பாப். இதன் விலை ரூ.3 லட்சம் வரை இருக்கும். இதன் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழப்புகளின் சதவீதம் வெகுவாக குறைந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார் 
    Next Story
    ×