search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை அரசு ஆஸ்பத்திரி"

    • குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது அடிக்கடி வாந்தியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.
    • தற்போது பச்சிளம் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகநாதன்-மீனாட்சி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8 வயது ஆகிறது.

    இந்தநிலையில் மீனாட்சி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார். பிரசவத்திற்கு முன்பாக பல்வேறு கட்டங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறப்பட்டது. அந்த குழந்தையை வரவேற்கும் விதமாக மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு உடலை மீனாட்சி முறையாக பராமரித்து வந்தார்.


    பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் எடை 1 கிலோ 900 கிராம் மட்டுமே இருந்தது. சராசரி எடையை விட குறைவாக இருந்ததால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் மற்றும் சர்க்கரை அளவு குறைபாடும் இருந்தது.

    இதையடுத்து அந்த குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் இன்குபேட்டரில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அங்குள்ள சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் 21 நாள் பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சொந்த ஊரான முதுகுளத்தூருக்கு சென்றனர்.

    அங்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது அடிக்கடி வாந்தியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. வாந்தி எடுக்கும் போது வாயில் இருந்து குழாய் போன்ற அமைப்பில் காற்றுடன் தண்ணீர் வெளியேறுவதுபோல் முட்டை முட்டையாக வந்ததை பார்த்து பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அழுது கொண்டே வலியால் துடித்ததால் உடனடியாக குழந்தையை பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்ததில் குழந்தையின் வயிற்றில் டியூப் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 21 நாட்கள் இன்குபேட்டரில் வைத்திருந்த குழந்தைக்கு தொண்டைக்குள் டியூப்பை விட்டு சிகிச்சை அளித்த போது அந்த டியூப்பை அகற்றாமல் அஜாக்கிரதையால் மறந்து குழந்தையை பெற்றோரிடம் திருப்பி கொடுத்துள்ளனர். அதனை அகற்ற அங்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் மீண்டும் குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.

    இதனால் தற்போது பச்சிளம் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது. டாக்டர்களின் அலட்சியம் மற்றும் அஜாக்கிரதையால் குழந்தை உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் உள்ளது. அங்கு சிறப்பு டாக்டர்கள் குழுவினர் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பரிசோதனை மற்றும் டியூப்பை அகற்றுவதற்கான சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.

    • வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
    • இன்று அதிகாலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வார்டுக்கு திரும்பவில்லை.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாத்தம்பாடியை சேர்ந்தவர் ரவி(வயது 36). கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட்டது. இது தொடர்பாக ரவி பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை.

    இதையடுத்து அவர் சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரவிக்கு நாக்கில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவி மனம் உடைந்தார். டாக்டர்கள் ரவியை மேல் சிகிச்சைக்காக மதுரை பாலரங்காபுரத்தில் உள்ள அரசு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்ட ரவி கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் அவருக்கு வலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதன்படி இன்று அதிகாலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வார்டுக்கு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தனது கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பத்மேஸ்வரன் தப்பி சென்ற சம்பவத்தில் அஜித் என்பவர் அவருக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது. இவர் மீதும் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய பத்மேஸ்வரனை அஜித் என்பவர்தான் மோட்டார் சைக்கிளில் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாரியப்பன். இவரது மகன் பத்மேஸ்வரன் (வயது 24). இவர் கடந்த மார்ச் மாதம் மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த 21 வயது இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் அவரது 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு மதுரை பனகல் ரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 17-ந் தேதி பத்மேஸ்வரன், போலீசாரை ஏமாற்றி தப்பி சென்று விட்டார். பின்னர் பத்மேஸ்வரன் தப்பிச்செல்லும் வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து தப்பி சென்ற பத்மேஸ்வரனை பிடிப்பதற்காக தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், மதிச்சியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசாரும் தப்பிய கைதியை தேடி வந்தனர். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது பத்மேஸ்வரன் தப்பி சென்ற சம்பவத்தில் அஜித் என்பவர் அவருக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது. இவர் மீதும் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய பத்மேஸ்வரனை அஜித் என்பவர்தான் மோட்டார் சைக்கிளில் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அஜித்தின் செல்போன் அழைப்புகளை கண்காணித்து வந்தனர். அப்போது பத்மேஸ்வரன் மேலூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு மேலூருக்கு விரைந்து சென்றனர்.

    அங்குள்ள ஒரு வீட்டில் பத்மேஸ்வரன், தனது கூட்டாளி அஜித்துடன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பிடிபட்ட 2 பேரிடமும் தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையின்போது பத்மேஸ்வரன் கூறியதாவது:-

    எனக்கு ஜெயிலில் இருக்க பிடிக்கவில்லை. எனவே தப்பிச் செல்ல முடிவு செய்தேன். இதனை தொடர்ந்து ஜெயிலில் என்னை பார்க்க வந்த உறவினர் ஒருவரிடம் நான், ஜெயிலில் இருந்து தப்பி செல்வது தொடர்பாக ஆலோசனை கேட்டேன்.

    அப்போது அவர் 'மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச் செல்வதுதான் பாதுகாப்பானது' என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஜெயில் அதிகாரிகளிடம் எனக்கு 2 கால்களும் வலிக்கின்றன' என்று தெரிவித்தேன். எனவே அவர்கள் என்னை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி சென்று விட்டேன்.

    பலத்த மழையால் ஏற்பட்ட மின்தடை காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் 3 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். #MaduraiGovernmenthospital
    மதுரை:

    மதுரையில் நேற்று மாலை கனமழை கொட்டியது. பலத்த இடி-மின்னலும் ஏற்பட்டது. இதில் மின் கம்பிகள் அறுந்து மின் வினியோகம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது.

    மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியிலும் மின்சாரம் தடைப்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் உள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஆனால் அதுவும் திடீர் பழுது அடைந்தது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் நேற்றிரவு இருளில் மூழ்கியது. இதற்கிடையே தலைக்காய சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவிகளும் மின்தடையால் செயல் இழந்தது.

    ஆக்சிஜன் கிடைக்காமல் அந்த சிகிச்சை பிரிவில் இருந்த மதுரை அருகே பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா (வயது 55), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (55), ஒட்டன்சத்திரம் பழனியம்மாள் (60) ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.

    இது குறித்து தெரியவந்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த அவர்களது உறவினர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.



    ஆஸ்பத்திரி அதிகாரிகள் கூறுகையில், “3 பேரும் கவலைக்கிடமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்தனர். மின்தடையால் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தார்களா? என விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர். #MaduraiGovernmenthospital
    ×