search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
    X
    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    டாக்டர்கள் ஸ்டிரைக்- மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் தவிப்பு

    அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். #DoctorsStrike
    மதுரை:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக சம்பளம் வழங்ககோரி தமிழகம் முழுவதும் இன்று டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 35-க்கும் மேற்பட்ட துறைகளில் பணிபுரியும் அரசு டாக்டர்கள் இன்று காலை பணிக்கு வரவில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    வெளி நோயாளிகள் பிரிவை பொருத்தவரை மிக குறைந்த டாக்டர்களே பணியில் இருந்ததால், நோயாளிகள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்க நேரிட்டது.

    இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) சண்முக சுந்தரத்திடம் கேட்டபோது, அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் காரணமாக ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

    இதையடுத்து அரசு டாக்டர்கள் அல்லாத பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களை பணியில் அமர்த்தி நிலைமையை சமாளித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

    ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியை புறக்கணித்தனர். இதனால் சிகிச்சைக்கு வந்த வெளி நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் உள்ள 42 டாக்டர்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 10 மருத்துவமனைகள், 48 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று காலை 8 மணி முதல் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.

    மற்றபடி அவசர சிகிச்சைகள், வார்டில் தங்கி உள்ள உள் நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் வெளிநோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று 1540 டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றதாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில பொருளாளர் டாக்டர் ராமு தெரிவித்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் 13 அரசு ஆஸ்பத்திரிகளும், 56 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள 156 டாக்டர்களில் 77 பேர் பணிக்கு வரவில்லை. இதனால் வெளிநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  #DoctorsStrike
    Next Story
    ×