search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோயம்பேடு கொத்தமல்லி வியாபாரியால் மாணவர்கள்-வங்கி ஊழியர் உள்பட 13 பேருக்கு கொரோனா

    கோயம்பேடு கொத்தமல்லி வியாபாரியின் மூலம் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அந்த வியாபாரி அவரது மனைவி, மகளுடன் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    வியாபாரியின் வீடு உள்ள திருமங்கலம் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. சுகாதார துறையினர் கிருமி நாசினிகள் தெளித்து தீவிர நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் வியாபாரியின் மூலம் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த நபர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய  தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 13 பேரில் 5 பெண்கள், கோயம்பேடு மற்றொரு வியாபாரி, 2 மளிகை கடைக்காரர்கள், மாற்றுத்திறனாளி, 21 வயது உடைய 3-ம் ஆண்டு கல்லூரி மாணவர், 13 வயது பள்ளி மாணவன், வங்கி ஊழியர் உள்ளிட்டோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து வியாபாரியுடன் கோயம்பேடு மார்கெட்டில் தொடர்பில் இருந்தவர்கள், மற்ற வியாபாரிகள் யார்? யார்? என்ற விபரங்களை எல்லாம்  சுகாதாரத்துறையினர் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.

    இதேபோல் நெற்குன்றம் திருமலை நகரைச் சேர்ந்த 36 வயது சலூன் கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது கடைக்கு சென்றவர்கள் தினசரி தொடர்பில் இருந்து வந்த அவரது நண்பர்கள் உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    அவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் 2 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்

    மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவருக்கு ஏற்கனவே கடந்த 22-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் உடன் வேலை பார்த்து வந்த மேலும் 2 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோயம்பேடு மார்க்கெட்டைத் தொடர்ந்து பூ மார்க்கெட்டுக்கும் கொரோனா பரவி உள்ளது. சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரி ஒருவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கடை வைத்து நடத்தி வந்தார்.

    இவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி, 3 குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அவர் வசித்து வந்த பகுதிக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். முழு ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு கடந்த 26-ந்தேதியில் இருந்து பூ மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. அதற்கு முன்புவரை சாலிகிராமம் வியாபாரி தினமும் தனது பூக்கடைக்கு சென்று வந்துள்ளார்.

    அப்போது மார்க்கெட்டுக்கு வந்த கொரோனா பாதித்த நபர் மூலமாக இவருக்கும் நோய் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    கோயம்பேடு பூ மார்க்கெட் கடந்த 3 நாட்களாக மூடிக்கிடப்பதால் 5 டன் பூக்கள் தேங்கி கிடக்கின்றன. பூ மார்க்கெட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    Next Story
    ×