search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயல்பட்டணம் அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    காயல்பட்டணம் அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு- காயல்பட்டணம் அரசு மருத்துவமனை மூடல்

    மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் காயல்பட்டணம் அரசு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 200 குடும்பத்தினர் கண்காணிப்பில் உள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோருக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தை சேர்ந்த 2 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் காயல்பட்டணம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிபவர் ஆவார். மற்றொருவர் அவரது நண்பர். இவர்கள் இருவரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். மருத்துவர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவுடன் அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். சுகாதாரத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் மருத்துவர் மற்றும் அவரது நண்பர் வீடு உள்ள காயல்பட்டணம் தெருக்கள் அடைக்கப்பட்டன. அந்த தெருவில் உள்ளவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    கொரோனா பாதித்த மருத்துவர் காயல்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்ததால் அவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தள்ளது. இதனால் அந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    2 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் காயல்பட்டணத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவர் மற்றும் அவரது நண்பரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 200 குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த குடும்பத்தினர் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு சுகாதார துறையினரால் கண்காணிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் காயல்பட்டணம் அரசு மருத்துவமனையில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த மருத்துவமனையை தற்காலிகமாக மூட முடிவெடுத்தனர். அதன்படி அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    அதன்பிறகு காயல்பட்டணம் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினரால் முழுவதுமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து காயல்பட்டணம் அரசு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு யாரும் சிகிச்சை பெற வந்தால் சிகிச்சை அளிக்க வசதியாக ஆஸ்பத்திரிக்கு வெளியே ஒரு வாகனத்தில் நடமாடும் மருத்துவமனை நடத்தப்படுகிறது. அதில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவபணியாளர் ஆகிய 3 பேர் பணியில் உள்ளனர்.

    இதேபோல் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த ஆத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த ஒரு நபருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சுகாதார துறை கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் உள்ள பகுதியும் யாரும் செல்ல முடியாத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×