search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கலசபாக்கம் அருகே வாலிபர் கொலை- 144 தடை உத்தரவு

    கலசபாக்கம் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கலசபாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த மேலாரணி அரசு பள்ளியில் மாவட்ட அளவிலான 3 நாள் விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது. அதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்றனர். 2-வது நாளான நேற்று மாலை விளையாட்டுப் போட்டிகள் முடிந்ததும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் அவரவர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். விளையாட்டுப் போட்டிகள் இன்றும் (திங்கட்கிழமை) நடப்பதால், ஒருசிலர் பள்ளி வளாகத்தில் தங்கியிருந்தனர். அவர்களில் பெண்களும் அடங்குவர்.

    இந்த நிலையில் மேலாரணியை அடுத்த எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

    அவர்களில் சிலர் தங்களின் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் கும்பல் கும்பலாக எலத்தூரில் இருந்து புறப்பட்டு மேலாரணியில் விளையாட்டு போட்டிகள் நடக்கும் பள்ளிக்கு வருவதும், பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து திரும்ப புறப்பட்டு மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் எலத்தூர் கிராமத்தை நோக்கி செல்வதுமாக இருந்து வந்தனர்.

    எலத்தூர் கிராம இளைஞர்களில் நடவடிக்கைகள் எரிச்சலை ஏற்படுத்தியதாலும் தவறான கண்ணோட்டத்தில் அவர்கள் இவ்வாறு செய்யலாம் எனவும் கருதி மேலாரணி காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர், தங்களின் மோட்டார் சைக்கிள்களை அப்பகுதியில் ஓரிடத்தில் சாலையின் குறுக்கே நிறுத்தினர்.

    அவர்கள் எலத்தூர் கிராம இளைஞர்களை மோட்டார் சைக்கிளில் வேகமாகச் செல்லாதீர்கள், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி எச்சரித்தனர்.

    அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைக்கலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த நிலையில் எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் வைத்திருந்த கத்தியால் மேலாரணி காலனியைச் சேர்ந்த கலையரசன் (வயது25) என்பவரை சரமாரியாகக் குத்தினார். அதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கலையரசனை சக இளைஞர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இந்தத் தகவலை கேள்விப்பட்ட மேலாரணி காலனியைச் சேர்ந்தவர்கள் திரண்டு விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் பள்ளிக்கு அருகில் வந்தனர். அங்கு, நிறுத்தப்பட்டு இருந்த 5 மோட்டார் சைக்கிள்களின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

    இதனால் மேலாரணி காலனி பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது மேலாரணியைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து, போலீசாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி விரைந்து வந்து விசாரணை நடத்தினார். விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் பள்ளியில் தங்கியிருப்போருக்கு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப்பணியிலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும், போலீஸ் டி.ஐ.ஜி.காமினி மேலாரணிக்கு வந்து விசாரணை நடத்தினார். அந்தப் பகுதியில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலசபாக்கம் போலீசார், கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குற்றவாளிகளை கைது செய்ய கோரி கலையரசனின் உறவினர்கள் இன்று காலை 8 மணி முதல் கலசபாக்கம்- செங்கம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் குணசேகரன், அண்ணாதுரை உட்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 3 மணி நேரமாக நடந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×