search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

    களக்காடு: சந்தன மரங்களை வெட்டி கடத்திய முன்னாள் வன ஊழியர் உள்பட 3 பேர் கைது

    களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய முன்னாள் வன ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விலை உயர்ந்த சந்தனம், தேக்கு உள்ளிட்ட மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, மான், மிளா, கரடி உள்ளிட்ட வன விலங்குகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது புலிகள் காப்பக பகுதியாக இருப்பதால் கட்டுப்பாடு மிகுந்த வனப்பகுதியாக உள்ளது.

    இந்நிலையில் முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினருக்கு பாதர்மலை பீட் சேர்வலாறு மின்வாரிய குடியிருப்பு பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் முண்டந்துறை வனச்சரக அலுவலர் சரவணகுமார் தலைமையில் வனவர் ஜெகன், வனக்காப்பாளர் அர்சுணன், தேசிங்கு ராஜன் மற்றும் வனப்பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தன மரத்தை மர்ம நபர்கள் 3 பேர் வெட்டிக்கொண்டு இருந்தனர். வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் வனத்துறையினர் அவர்களை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சேர்வலாறு பகுதியை சேர்ந்த முருகன், மாயாண்டி, அசோக்குமார் ஆகியோர் என்பது தெரிந்தது. இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள 4 சந்தன மரங்களை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட முருகன் ஏற்கனவே வனத்துறையில் பணிபுரிந்த போது தேக்கு மரக்கடத்தலில் ஈடுபட்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பை புலிகள் காப்பக துணை இயக்குநர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்படி நேற்று அம்பை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×