search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை
    X
    யானை

    பெரியநாயக்கன்பாளையத்தில் காட்டு யானை தாக்கி வாலிபர் பலி

    பெரியநாயக்கன்பாளையத்தில் காட்டு யானை தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் உள்ளது பாலமலை. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான இங்கு 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மற்றும் சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விடுகின்றன. பெரும்பாலும் யானைகள் மட்டும் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்றும் மிதித்தும் நாசம் செய்து விடுகின்றன.

    மேலும் குடியிருப்புக்களை இடித்து தள்ளி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் மனித- விலங்கு மோதல் ஏற்படுகிறது.

    இந்நிலையில் பாலமலை பகுதியில் உள்ள பெருக்குபதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 45). இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். மகள் திவ்யா (18) என்பவருடன் வசித்து வருகிறார். திவ்யா மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

    நேற்று இரவு சின்னசாமி தனது தாய் மாரியம்மாளை பார்க்க அருகில் உள்ள குஞ்சூர் என்ற கிராமத்துக்கு சென்றார். அங்கு மாரியம்மாளிடம் பேசி விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார். இருட்டில் வனப்பகுதியையொட்டி நடந்து வந்தபோது புதர்மறைவில் ஒரு காட்டுயானை நின்றது. புதர்மறைவில் இருந்த காட்டுயானை திடீரென ஓடிவந்து சின்னசாமியை தூக்கி வீசியது.

    கீழே விழுந்து சின்னசாமி அதிர்ச்சியடைந்து அலறி சத்தம்போட்டார். சுதாரித்து அவர் எழுந்து தப்பிக்க முயன்றபோது சின்னசாமியை யானை துதிக்கையால் சுழற்றி வீசி எறிந்து கால்களால் மிதித்தது. சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து காட்டுயானையை விரட்டினர். யானை மிதித்து ரத்தவெள்ளத்தில் கிடந்த சின்னசாமியை மீட்டனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சின்னசாமியை சோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. வனத்துறையினர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×