search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    3 ஆண் யானைகள் தந்தங்களுக்காக கொன்று புதைப்பு - வன ஊழியர் உள்பட பலர் சிக்குகிறார்கள்

    அஞ்செட்டி அருகே உரிகம் வனப்பகுதியில் 3 ஆண் யானைகள் தந்தங்களுக்காக கொன்று புதைக்கப்பட்டுள்ளன. இதில் வன ஊழியர் உள்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. விரைவில் அவர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.
    கிரு‌‌ஷ்ணகிரி:

    கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு 400-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இதைத் தவிர அருகில் உள்ள கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் இந்த வனப்பகுதிக்குள் வந்து அருகில் உள்ள கிராமங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.

    இந்த நிலையில் அஞ்செட்டி அருகே உரிகம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பிலிக்கல் வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்றை மர்ம நபர்கள் கொன்று தந்தத்தை வெட்டி எடுத்ததாகவும், பின்னர் அந்த யானை அப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டதாகவும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி வன பாதுகாவலர் ஜெகதீசன் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அதிகாரிகளின் விசாரணையில், மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சி பேல்பட்டி என்னும் இடத்தின் அருகில் வனப்பகுதியில் யானையை கொன்று, தந்தத்தை கடத்தியதும், பின்னர் யானை புதைக்கப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அந்த பகுதியில் இதே போல மற்றொரு ஆண் யானையும் கொன்று தந்தங்கள் கடத்தப்பட்டதும், அந்த யானையும் புதைக்கப்பட்டதும் தெரிய வந்தது.இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள், பிலிக்கல் பகுதி வன காப்பாளர் மாணிக்கம் என்பவரிடம் விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே பிலிக்கல் அருகில் உள்ள தாண்டியம் பீட் என்னும் இடத்திலும் இதே போல மற்றொரு ஆண் யானை தந்தத்திற்காக கொன்று புதைக்கப்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது. கடந்த 2 மாதங்களில் மட்டும் மொத்தம் 3 யானைகள் தந்தத்திற்காக கொன்று புதைக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த யானைகள் அனைத்தும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து வன மருத்துவ குழுவினர், வனத்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் அங்கு விரைந்துள்ளனர். சம்பவம் நடந்த இடம் அடர்ந்த வனப்பகுதியாகும். யானைகளை கொன்று தந்தங்களை கடத்தியது யார்? யானையை புதைக்க உதவியது யார்? அந்த பகுதிக்கு பொக்லைன் எந்திரங்களை கொண்டு வந்தவர்கள் யார்? என்று வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவங்கள் வன ஊழியர் ஒருவரின் துணையுடன் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தங்களுக்காக 3 ஆண் யானைகள் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அஞ்செட்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×