search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரம் ஐஸ்வர்யா நகரில் பஸ்சும், லாரியும் மோதி நின்ற காட்சி
    X
    தாராபுரம் ஐஸ்வர்யா நகரில் பஸ்சும், லாரியும் மோதி நின்ற காட்சி

    தாராபுரத்தில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்: 13 பயணிகள் படுகாயம்

    தாராபுரத்தில் இன்று காலை பஸ்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாராபுரம்:

    தேனியில் இருந்து திருப்பூருக்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை செல்வராஜ் (வயது 45) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக அன்னக்கொடி (53) இருந்தார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    பஸ் இன்று காலை 6 மணியளவில் தாராபுரம் புறவழிச்சாலையில் வந்தது. அப்போது எதிரே தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு லாரி சென்றது. அந்த லாரியை மணிகண்டன் (27) என்பவர் ஓட்டினார்.

    இந்த விபத்தில் ஐஸ்வர்யா நகரில் வந்தபோது பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டு காயம் அடைந்தவர்களை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காயம் அடைந்த பஸ் டிரைவர் செல்வராஜ், லாரி டிரைவர் அன்னக்கொடி மற்றும் பயணிகள் மகுடீஸ்வரன் (46) சந்தோஷ் (49), அருண்குமார் (28), மாலதி (23), முருகேசன் (76), திருநாவுக்கரசு (46), காளிதாசன் (32)ராமன் (60), ராஜாமணி (63), கண்ணதாசன் (32), பழனியப்பன் (60) ஆகிய 13 பேருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காலையில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×