search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் மனைவி வான்மதியுடன் நம்பிராஜன்
    X
    காதல் மனைவி வான்மதியுடன் நம்பிராஜன்

    காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை - கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

    நெல்லையில் காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அவருடைய மனைவியின் அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 52). இவருடைய மகன் நம்பிராஜன் (23). இவர் அங்குள்ள பால் பண்ணையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டி மகள் வான்மதி (19) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு வான்மதி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நம்பிராஜன், வான்மதியை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் நெல்லை டவுன் வயல்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வயல் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் என்பவர் நம்பி ராஜனிடம், உங்கள் இரண்டு குடும்பத்துக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை பேசி சமாதானம் செய்வதாக கூறி உள்ளார். அவர் கடந்த 25-ந் தேதி இரவு செல்போனில் நம்பிராஜனை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை அருகே உள்ள ரெயில்வே கேட்டுக்கு வரும்படி அழைத்தார். அதை நம்பி நம்பிராஜனும் அங்கு சென்றார்.

    அப்போது அங்கு நின்ற ஒரு கும்பல் நம்பிராஜனை வெட்டிக்கொலை செய்துவிட்டு, அவரது உடலை ரெயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். அவரது உடல் மீது அந்த வழியாக சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் ஏறி இறங்கியதில், தலை துண்டானது.

    இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌‌‌ஷனர் சரவணன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் விமலன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த கொலை தொடர்பாக வான்மதியின் அண்ணன் செல்லசாமி (26), உறவினர்கள் செல்லத்துரை (24), முருகன் (25) மற்றும் முத்துப்பாண்டியன், விசுவநாதன் ஆகிய 5 பேரை நேற்று பிடித்தனர். அவர்களிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அப்போது அவர்கள் நம்பிராஜனை திட்டமிட்டு கொலை செய்த விபரத்தை கூறினார்கள். இதைத் தொடர்ந்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். கைதான வான்மதியின் அண்ணன் செல்லசாமி, போலீசாரிடம் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மறுகால் குறிச்சியில் நம்பிராஜன் மற்றும் அவரது நண்பர்கள் தனி குரூப்பாகவும், நாங்கள் தனி குரூப்பாகவும் செயல்பட்டு வந்தோம். இரண்டு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்தது. நம்பிராஜன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ஏராளமான வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் நம்பிராஜன், என் தங்கை பின்னால் அடிக்கடி சுற்றி வருவதாக கேள்விப்பட்டேன். இதனால் நான் எனது நண்பர்களுடன் சென்று அவரை எச்சரித்தேன். நம்பிராஜனும் அவனது குடும்பத்தினரும் நல்லவர்கள் இல்லை என்பதால் என் தங்கையை கட்டிக்கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

    அப்போது நம்பிராஜன், என் தங்கையை தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்யப்போவதாக சவால் விட்டான். அப்படி நடக்க விடமாட்டேன், அதற்குள் உன் தலையை எடுத்து விடுவேன் என்று பதிலுக்கு நாங்களும் சவால் விட்டோம். ஆனால் நம்பிராஜன் சவால் விட்டப்படி என் தங்கையை கடத்தி சென்று திருமணம் செய்து விட்டான்.

    இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் சொன்னபடி திருமணம் செய்ததால், நாங்களும் நம்பிராஜனை கொலை செய்ய தேடி வந்தோம். அப்போது நம்பிராஜன் நெல்லையில் பதுங்கி இருந்து குடும்பம் நடத்தியது தெரிய வந்தது. வயல் தெருவிலும் அவர் சண்டியர் போல் வலம் வந்ததால், அங்குள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை.

    இதனால் எங்களுக்கு தகவல் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து நாங்கள் திட்டமிட்டு அவரை கொலை செய்தோம். ரெயில் விபத்து நடந்தது போல் ஏமாற்றி தப்பிக்க நினைத்தோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரையும் நெல்லை கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.


    கொலை செய்யப்பட்ட நம்பிராஜன்
    Next Story
    ×