search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    பெரியபாளையம் அருகே மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் மறியல்

    பெரியபாளையம் அருகே மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள பண்டிகாவனூர் துணைமின் நிலையத்தில் இருந்து கன்னிகைபேர், நெய்வேலி, பூரிவாக்கம், பெரியபாளையம், திருக்கண்டலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், நேற்று காலை மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

    இரவு வரை மின்சாரம் சப்ளை செய்யப்படாததால் மின்சப்ளை எப்போது கிடைக்கும் என்று கேட்க பொதுமக்கள் துணை மின் நிலையத்துக்கு வந்தனர். ஆனால், அலுவலகத்தில் மின்வாரிய அதிகாரிகள் யாரும் இல்லை. செல்போனில் தொடர்பு கொண்டாலும், சரியான பதில் இல்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பண்டி காவனூர் துணை மின் நிலையத்திற்கு எதிரே சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த ரவி, பா.ஜனதா ஆனந்தன், மஞ்சங்காரணை பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், சோழவரம் காவல் நிலைய போலீசார், மின்வாரிய கோட்ட பொறியாளர் வாசு ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். சிறிது நேரத்தில் மின்சார சப்ளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.

    பொன்னேரி அருகே மூகாம்பிகை நகர் செங்குன்றம் சாலையில் பொக்லைன் எந்திரம் டிரான்ஸ்பார்மர் மீது உரசி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி ஆகியும் மின்சாரம் வரவில்லை.

    மின்வாரியத்தை தொடர்பு கொண்டாலும் உரிய பதில் அளிக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தை சாலையில் குறுக்கே வைத்து பொன்னேரி-செங்குன்றம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.

    மின்கோளாறு சரிசெய்யப்பட்டு விரைவில் மின் சாரம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் கூறியதாக போலீசார் தெரிவித்ததையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×