search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கட்டப்பஞ்சாயத்து விவகாரம்: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம்

    கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த பாலக்கோடு இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டருக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    சென்னை:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கரகதஹல்லி கிராமத்தை சேர்ந்தவர் டி.சிவசண்முகம். இவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    நான் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். கடந்த 2018-ம் ஆண்டு சிவில் பிரச்சினையில் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்து என்னையும், எனது குடும்பத்தினரையும் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கினர். இதில் காயம் அடைந்த நாங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றோம்.

    இதுதொடர்பாக புகார் அளித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது அப்போதைய பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் முறையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை.

    கோர்ட்டில் தவறான தகவலை அளித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் பெற அவர்கள் உடந்தையாக இருந்தனர். எனவே 2 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இந்த மனு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் போலீசார் இருவரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது.

    எனவே பாதிக்கப்பட்ட சிவசண்முகத்துக்கு ரூ.40 ஆயிரத்தை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் 8 வார காலத்துக்குள் வழங்கி விட்டு அந்த தொகையை போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோரிடம் வசூல் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

    மேலும் அவர்கள் 2 பேர் மீதும் கூடுதல் தலைமை செயலாளர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்தார்.
    Next Story
    ×